``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்
இந்திய இளைஞரை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உக்ரேனியப் பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த விக்டோரியாவும் இந்தியாவைச் சேர்ந்த சக்ரவர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு விக்டோரியா இந்தியாவுக்கே வந்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் விக்டோரியா தன் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ``ஆடை அலங்காரம், இந்திய உணவு வரை உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடுவது வரையிலான சிறிய மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியையும், உறவுகளையும் தந்திருக்கிறது.
குறிப்பான மூன்று மாற்றங்களை பட்டியலிடலாம். சேலை மெதுவாக என் அலமாரியின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சேலை இல்லாமல் ஒரு திருமணத்திலோ அல்லது பிற நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
பாரம்பரிய உணவை கைகளால் சாப்பிடுவது இப்போது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. கையால் சாப்பிடுவது உண்மையில் உணவுக்கு சுவை கூட்டுவதாக உணர்கிறேன்.
பண்டிகைகள் எனக்கு மிகவும் பிடித்த காலங்களில் ஒன்றாக மாறிவிட்டன. வண்ணங்கள், விளக்குகள், கொண்டாட்டங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கின்றன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு வீடியோவில், ``இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று பலர் கூறினர். ஆனால் எனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தேன்.
நான் இங்கு வந்தது மட்டுமல்லாமல், காதலித்தேன், திருமணம் செய்து கொண்டேன், ஒரு தொழிலை உருவாக்கினேன். மக்கள் உங்களைச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் இடத்திலிருந்து சிறந்த அத்தியாயங்களும் தொடங்கலாம். அதனால், தைரியத்துடன் உங்களை வழிநடத்துங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.