செய்திகள் :

1970களில் நடந்த காலனி ஒலிம்பிக்ஸ் - திருச்சி டைரீஸ் | கிறிஸ்துமஸ் இரவுகள் 6 | #Trichy

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

காலனியில் ஒலிம்பிக்ஸ்

மதுரம் கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில் எங்கள் காலனி சிறுவர்களின் மாலை விளையாட்டு கால்பந்தாகவே இருக்கும். ஒரு சிறிய ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு விளையாடுவோம். சில நேரங்களில் விளையாட கால்பந்து வீரர் ஜெரொம் தயவால் பெரிய தோல் கால்பந்தே கிடைக்கும்.

கல்லூரியில் ஆண்டு தடகளப் போட்டிகள் நடை பெறும் பொழுது நாங்களும் பார்க்க செல்வோம். பொதுவாக தடகளப் போட்டிகள் மாரத்தான் போட்டியுடன் துவங்கும். கல்லூரி ஆசிரியர்களின் கயிறு இழுக்கும் போட்டியுடன் முடிவுறும். ஒரு ஆண்டு எங்கள் அம்மா ம்யூசிகல் சேர் போட்டியில் முதல் பரிசு வென்றார். எங்கள் அப்பா அவருக்கு கை கொடுத்த பொழுது அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது.

கல்லூரி தடகளப் போட்டிகள் முடிந்ததும் எங்கள் காலனியில் தடகளப் போட்டிகள் ஆரம்பமாகும். இரு குழுவாக பிரிந்து போட்டி போடுவோம். பொதுவாக எனக்கும் தினேஷ் என்ற இன்னொரு சிறுவனுக்குமே சாம்பியன்ஷிப்புக்கான போட்டி இருக்கும். யார் அதிக போட்டிகளில் வெற்றி பெறுகிறாரோ அவரே சாம்பியனாக கருதப்படுவார்.

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்பது ஒரு வேப்பமரத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஓடவேண்டும். அதே சுற்றை இருபது முறை ஓடினால் பத்தாயிரம் மீட்டர் ஓட்டமாக கருதப்படும்.

இது தவிர்த்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெறும். ஒரு முறை எனக்கும் மல்லிகா என்ற பெண்ணுக்கும் இடையே பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. அன்று என்னவென்று தெரியவில்லை, என்னை அந்தப் பெண் முந்திவிட்டாள். என்ன முயன்றும் என்னால் அவளை முந்த முடியவில்லை.

நான் உடனே மயக்கம் போட்டு விழுந்தது போல் நடித்தேன். என் அம்மாவும் பக்கத்து வீட்டு அம்மாவும் என்னை தூக்கி சென்று ஒரு ஓரமாக படுக்க வைத்தனர். போட்டி பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த பெண் மல்லிகாவுக்கு மிகுந்த ஏமாற்றம். அந்த நிகழ்வுக்கு பின்னர் வந்த நாட்களில் நடைபெற்ற எந்த ஒரு போட்டியிலும் மல்லிகாவை என்னை வெல்ல முடியவில்லை.

இவை தவிர தமிழ்நாட்டுக்கே உரித்தான கபடி, நொண்டி, கில்லி தாண்டு, திருடன் போலீஸ், கோலி குண்டு போன்ற விளையாட்டுகளையும் நாங்கள் விளையாடுவோம்.

விடுமுறை நாட்களில் நாங்கள் விளையாடும் இன்னொரு விளையாட்டு பூவா தலையா. ஒரு நாணயத்தை கொண்டு பூவா தலையா போட்டு விளையாடுவோம். பூவா தலையா போடுபவர் விளையாடுபவர்கள் சரியாக சொல்லி விட்டால் விளையாடுபவர் வைத்து விளையாடும் பணத்துக்கு சமமான பணத்தை அளிக்கவேண்டும். தவறாக சொன்னால் விளையாடுபவர் வைக்கும் பணம் பூவா தலையா போடுபவருக்கு சென்றுவிடும்.

டிசம்பர் மாதத்தில் பலர் பட்டம் பறக்க விடுவார்கள். இதற்கு தோதான இடம் பிஷப் ஹீபர் மைதானமே. பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் பட்டம் விடுவார்கள். டவுன் ஹால் பக்கம் ஒரு வீட்டில் தங்கியிருந்த வௌவா குஞ்சு என்பவன் பட்டம் பறக்க விடுவதிலும் மாஞ்சா நூல் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவன். அவன் விடும் பட்டம் அதிக உயரத்திற்கு பறந்து செல்லும். சில வேலைகளில் இன்னும் சிலருடன் போட்டி வைத்துக் கொண்டு பட்டம் பறக்க விடுவார்கள். இருவர் பட்டம் விடும்போது டீல் வைத்துக் கொண்டு போட்டி போடுவார்கள். யாருடைய பட்டம் முதலில் அறுகிறதோ அவர் போட்டியில் தோற்றதாக கருதப்படுவார்.

இலங்கை வானொலியும் திரை சித்திரமும்

பட்டம் விடும் போது ஒரு சிறு பேப்பர் காகிதத்தில் ஓட்டை போட்டு நூலில் அனுப்புவார், பட்டம் விடுபவர். அந்த பேப்பரும் சிறிது சிறிதாக பட்டத்தை சென்று அடையும்.. இதற்கு தந்தி அனுப்புவது என்று பெயர். அத்துடன் சில இரவுகளில் லைட் பட்டம் என்று அழைக்கப்படும் பட்டங்கள் பறப்பதை பார்க்க முடியும். இவை வானில் விளக்கு பறப்பது போல் இருக்கும். இது எப்படி சாத்தியமென எனக்கு இன்று வரை தெரியவில்லை.

டெலிவிஷன் வசதி அப்போது இல்லை. வீடுகளில் வானொலி உபயோகம் அதிகம் இருந்தது. ஞாயிற்று கிழமைகளில் ஒலிபரப்பப் படும் திரை சித்திரம், என்ற சினிமாவின் ஆடியோ ஒலிபரப்பு மிக பிரபலமான நிகழ்ச்சி. இலங்கை வானொலியும் தமிழ் அறிந்த மக்களிடையே மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது.

இந்தியாவில் விவிதபாரதி என்ற ஒலிபரப்பு கேந்திரமும் அதில் ஒலிபரப்பப் படும் நிகழ்வுகளும் நல்ல பொழுது போக்கிகளாய் இருந்தன. ஞாயிற்று கிழமைகளில் ஒலிபரப்பான சுசித்ராவின் குடும்பம், போர்ன்விட்டா வழங்கிய வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

டென்னிஸ் பால் கிரிக்கெட்

டென்னிஸ் பால் கிரிக்கெட் சிறுவர்களிடையே பிரபலமான விளையாட்டாக இருந்தது. இரண்டு காலனிகளுக்கும் இடையே போட்டி நடைபெறும். காலனியை பிரிக்கும் இலக்கான சாக்கடையே பவுண்டரியாக இருந்தது. மூன்று சவுக்கு விறகுகளே ஸ்டம்பாக இடம் பெறும்.

ஒரு முறை நாகராஜன் என்ற ஆங்கில ட்யூட்டர் வீட்டுக்கு சில சிறுவர்கள் விடுமுறைக்கு தில்லியில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களில் பெரிய பையனொருவன் வீசிய பந்தை நான் வேகமாக அடிக்க அது அவன் சில்லு மூக்கை உடைத்து விட்டது. ரத்தம் மூக்கில் இருந்து கொட்ட ஆரம்பித்தது. அந்த பையனோ சிறிதும் கவலைப் படாமல் மூக்கை பொத்திக் கொண்டு தலையை உயர்த்தி ரத்தப் போக்கை நிறுத்திவிட்டான்.

எங்கள் காலனியில் சீனியர்கள் சில பேர் இருந்தார்கள். கல்லூரியில் படிப்பவர்களாகவோ அல்லது வேலை செய்பவர்களாகவோ அவர்கள் இருந்தார்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தால் சிறுவர்களாகிய நாங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

சில நேரங்களில் கால்பந்து விளையாட்டின் பொழுது கோல் கீப்பர்களாகவோ, கிரிக்கெட் விளையாடும்பொழுது பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கி போடும் உப்புக்கு சப்பாணிகளாகவோ நாங்கள் இருப்போம். சில சீனியர்கள் சேர்ந்து காலனி தினத்தை கொண்டாடுவதென ஒரு முறை முடிவு செய்தார்கள். உடனே ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு அந்த அமைப்புக்கு பீ.பீ.சி என்று பெயரிடப்பட்டது அதாவது ப்ரெதரன் ஆஃப் பிரிட்டோ காலனி. தமிழில் பிரிட்டோ காலனியின் சகோதரர்கள்.

சீனியர்களாகிய அவர்கள் சிறுவர்களாகிய எங்களை நன்கு உபயோகப் படுத்தி கொண்டார்கள். ஒவ்வொரு வீடாகச்சென்று நன்கொடை வசூலித்து வந்தோம். இரண்டு மூன்று வீடுகளில் இருந்து கடன் வாங்கி வரப் பட்ட மர பெஞ்சுகள் கயிறு கொண்டு கட்டப்பட்டு தற்காலிக மேடையாக உறு மாறின.

உட்கார நாற்காலிகளும் கடன் வாங்கி பெறப் பட்டன. மேடையை ஒளியேற்ற குழல் விளக்குகள் மைக்கிள்ஸ் கடையிலிருந்து பெறப்பட்டது. சிறுவர்களாகிய நாங்கள் பாட்டு, நடனம் அல்லது குறுநாடகம் போடுவோம். நிகழ்ச்சி முடிந்தவுடன் சீனியர்கள் பிலால் ஹோட்டல் போய் நாங்கள் வசூலித்த பணம் கொண்டு புரோட்டா சாப்பிடுவார்கள்.

சிறு வயதில் நாங்கள் சிறுவர், சிறுமியர் வித்தியாசம் பாராது விளையாடுவோம். நாங்கள் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டு கூட்டாஞ்சோறு. இதில் பங்கேற்போர் வீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கள் மற்றும் மஞ்சள் தூள் எடுத்து வருவோம்.

எங்கள் வீட்டில் கொல்லைப்புறம் இருந்தது. கொல்லை என்பது வீட்டை ஒட்டி உள்ள காலி இடம். இநத கொல்லைபுறத்தில் தான் நாங்கள் கூட்டாஞ்சோறு செய்வோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கைந்து சிறுவர், சிறுமியர் மட்டும் கூட்டாஞ்சோறு செய்யும் விளையாட்டு விளையாடுவோம். ஒரு சிறு அடுப்பு மூட்டி அதில் ஒரு சிறு பானையை வைத்து இருக்கும் எல்லா பொருட்களையும் கலந்து கூட்டாஞ்சோறு செய்வோம்.

கூட்டாஞ்சோறு செய்து முடித்தவுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த பாதி வெந்த பாதி வேகாத சோறை பங்கேற்ற அனைவரும் வாழை இலையில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாப்பிடுவோம்.

கிறிஸ்துமஸ்

மாதா கோவில்களில் நடைபெறும் ஆடம்பர திருப்பலிகளில் பாதிரியார் தவிர முக்கியமான இரு குழுக்கல் இருந்தன. ஒன்று பலிபீட பணியாளர்கள் குழு. மற்றது பாடகர் குழு.

பலிபீட பணியாளர்கள் குழு என்பது குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் பொழுது குருவானவருக்கு உதவுபவர்கள். ஆடம்பர திருப்பலிகளில் பலி பீட பணியாளர்கள் நால்வர் முக்கியமாய் தேவை. இவர்கள் இல்லாமல் கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு மற்றும் உயிர்ப்பு விழா சமயங்களில் திருப்பலியில் பொதுமக்கள் பங்கேற்பு அதிகம் இருக்குமென்பதால் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு பலி பீட பணியாளர்கள் தவிர ஜிகினா வேலைப்பாடாக பல பணியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு சகோதரரால் பயிற்சி அளிக்கப்படும். ஆடம்பர திருப்பலி முடிந்ததும் பலிபீட பணியாளர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்படும்.

பலிபீட பணியாளர்கள் குழு போல ஆடம்பர திருப்பலிக்கு தேவையான இன்னொரு குழு பாடகர் குழு. இவர்கள் திருப்பலி நிறைவேறும் பொழுது பாடல்கள் பாடி பங்கேற்பர். குருவானவர் திருப்பலி ஆற்றும் பொழுது சொல்லும் வேண்டுதல்களுக்கும் ஜெபங்களுக்கும் பாடலாக பதில் அளிப்பார்கள். ஆடம்பர திருப்பலி முடிந்ததும் இவர்களுக்கும் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்படும். இதன் தரம் பலி பீட பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக இருக்கும். எனவே பாடகர் குழுவில் சேர பலத்த போட்டி இருக்கும்.

இந்த இரு குழுக்கலிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பங்களிப்பு இருக்கும்.கிறிஸ்துமஸ் போன்ற ஆடம்பர திருப்பலிகளில் தயாரிப்பு பல நாட்கள் நடைபெறும். ஒப்பிட்டு பார்க்கும்பொழுது பலிபீட பணியாளர்களை விட பாடகர் குழுவின் தயாரிப்பு அதிக நாட்கள் நடைபெறும். கிறிஸ்துமஸ் தயாரிப்பு நாட்களில் பாடகர் குழு வீடு வீடாக சென்று கிறிஸ்துமஸ் வழி பாட்டு பாடல்கள் பாடுவார்கள் இந்த தயாரிப்பு காரல்ஸ் என்று அழைக்கப்படும். காரல்ஸ் பாடி செல்லும் பாடகர் குழுவிற்கு பங்கு மக்கள் தேநீரோ பிஸ்கட் போன்ற சிற்றுண்டியோ அளிப்பார்கள்.

கிறிஸ்துமசை எதிர்நோக்கி கிறிஸ்துவ மக்கள் வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்கவிடுவார்கள். இந்த நட்சத்திரம் கிறிஸ்துமஸ் அடையாளமான வால் நட்சத்திரம் தோன்றியதை குறிக்கும். இத்துடன் கிறிஸ்துவர்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக வீடுகளில் குடில் தயாரித்து அலங்கரிப்பார்கள். இது நவராத்திரி சமயங்களில் வீடுகளில் இந்துக்கள் கொலு வைப்பது போலாகும். இப்போது அலங்கரிக்கப்பட்ட விதவிதமான நட்சத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன.

நான் சிறுவனாய் இருந்த பொழுது நட்சத்திரங்கள் கடைகளில் கிடைப்பதில்லை. மூங்கிலில் செதுக்கி நன்கு இருக்கி கட்டப்பட்ட நட்சத்திரங்களே வீடுகளில் இருக்கும். அவை திருவிழா காலங்களில் பரணில் இருந்து கீழே இறக்கப்பட்டு வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி அலங்கரிக்கப்பட்டு வீடுகளின் முன்னே தொங்க விடப்படும்.

நான் சிறுவனாக இருந்த சமயம் ஆங்கிலோ இந்தியர்கள் பொன்மலையில் இருந்து ஆண்களும் பெண்களுமாய் காரல்ஸ் பாட சைக்கிள்களில் காலனிக்கு வருவார்கள். தெற்கு ரயில்வேயில் நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் வேலை பார்த்தனர். அவ்வாறு வேலை பார்த்தவர்கள் பொன்மலையில் இருந்த ரயில்வே குடி இருப்புகளிலேயே இருந்தனர். இப்பொழுதெல்லாம் ஆங்கிலோ இந்தியர்கள் அவ்வாறு வருவதில்லை. அத்துடன் திருச்சியில் இருந்த நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் ஆஸ்திரேலியா குடிபெயர்ந்து விட்டனர்.

டெரி காட்டன் கால் சட்டைகளும் டெரிலினில் சட்டையும் கொடுத்த ஏக்கம்

கிறிஸ்துமசுக்கு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அப்பா புது துணி வாங்கி தருவார். ஒவ்வொருவருக்கும் அப்பா ஒரு பட்ஜெட் போட்டு செலவளிப்பார். எனக்கும் எனக்கு மூத்தவருமான யூஜின் என்பவருக்கும் என்.எஸ்.பீ ரோடில் அப்போது இருந்த சிட்டி எம்போரியம் என்ற துணிக்கடையிலேயே துணி எடுப்பார். அந்த கடையில் இருந்த தையல்காரரிடமே துணி தைக்க கொடுப்போம். எங்கள் பால பருவத்தில் காட்டன் துணியிலேயே சட்டை, ட்ரௌசர் எடுப்பார்.

மற்ற பையன்கள் டெரி காட்டன் கால் சட்டைகளும் டெரிலினில் சட்டையும் போட்டு வருவது காணும் பொழுது பொறாமையாக இருக்கும். ஆனால் அதை வெளியில் காண்பித்துக் கொள்ள மாட்டோம். அவ்வாறு வளர்க்க பட்டிருந்தோம்.கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி முடிந்து வீடு வந்ததும் அம்மா அனைவருக்கும் அதிரசம், நெய் உருண்டை போன்ற இனிப்புகளை வழங்குவார்.

கிறிஸ்துமஸ் திருப்பலி முடிந்த பின் டிசம்பர் 28 ஆம் தேதி கிறிஸ்து பிறப்புக்கு பின்கொல்லப்பட்ட கள்ளங்கபடமில்லாத குழந்தைகளின் நினைவாக கொண்டாடப் படுகிறது. அத்தினத்தன்று காலேஜ் பங்கு கோவிலில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் . இந்த விளையாட்டுகளை கோவிலில் இயங்கி வந்த இளைஞர் மன்றம் நடத்தும். வெற்றி பெற்றொருக்கு ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும்.

புத்தாண்டு திருப்பலியும் இரவு நேர திருப்பலியாகவே இருக்கும். தமிழ்நாட்டில் ஜனவரி ஒன்று அரசாங்க விடுமுறை தினமாக இருப்பதால் வெற்றி பெற்ற அனைவருக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படும். பரிசுப் பொருட்கள் சோப்பு டப்பா, மக் மோன்ற பிளாஸ்டிக் பொருட்களாகவே இருக்கும்.

இந்த விஷேசங்கள் கொண்டாடப் பட்ட பின் பாடகர் குழு உறுப்பினர்களையும் பலி பீட பணியாளர் குழு உறுப்பினர்களையும் கோவில் நிர்வாகம் சிற்றுலா அழைத்துச் செல்லும். அதுவரை தீவிர உறுப்பினர்களாய் இருந்த பலர் சிற்றுலா சென்று வந்த பின் தலை மறைவாகி விடுவார்கள். அடுத்து அவர்களை அடுத்த கிறிஸ்துமஸ் போது தான் பார்க்க முடியும்.

ஒரு முறை பலி பீட பணியாளர்களை சிற்றுலா அழைத்துச்செல்ல நிர்வாகம் மறுத்து விட்டது. அப்போது பலி பீட பணியாளர்களின் பொருப்பாளராய் இருந்த சகோதரர் அனைத்து பலி பீட சிறுவர்களையும் அழைத்து கோவில் மேல் அழைத்துச்சென்றார்.

கோவிலின் மேல் ஏறி கோவில்மணி வரை செல்ல படிக்கட்டு உண்டு. அதற்கு மேல் செல்ல பெரிய பெரிய மூங்கில் ஏணிகளில் ஏறிச் செல்லவேண்டும். மணி இருக்கும் தளத்தின் மேலிருந்து முதல் தளம் வரை ஏணி ஏறி சென்று விட்டேன். அதன் பின்னர் ஆட்டம் கொடுக்கும் ஏணிகளின்மேல் செல்ல எனக்கு தைரியம் இல்லை. முதல் தளத்திலேயே நின்றுவிட்டேன். அப்படியே மேலே ஏறிச்சென்றால் கோவில் மேல் நிறுவப்பட்டுள்ள சிலுவையின் கீழ் பகுதியை பார்க்க முடியுமாம். நாங்கள் முதல் தளம் சென்றதை உறுதி செய்ய சுவர்களில் சிறுவர்களின் பெயர்கள் எழுதி உள்ளோம்.

பொதுவாக ஜனவரி முதல் வார புதன் கிழமைகளில் பள்ளிகள் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பெறும். அது வரை துவைத்து உள்ளே வைக்கப்பட்டு இருந்த புத்தாடைகள் வெளி வரும். புத்தகங்கள் சரி பார்க்கப் பட்டு பைகளில் வைக்கப்பெறும். கிறுஸ்துமஸ் விடுமுறைகள் நிறைவடைந்து இனி இந்த விழாக்காலம் வர அடுத்த டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

15 வருடங்கள் கழித்து என் ஆசை நிறைவேற போகிறது! - ரஜினி, கமல் ரசிகர் நெகிழ்ச்சி #MyVikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் வாழ்வில் நடந்த `டூரிஸ்ட் ஃபேமிலி’ தருணம் - தி.நகர் வியாபாரியின் நெகிழ்ச்சி கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க