நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்து...
Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு, தானாகச் சரியாகிவிடுமா? தாய்ப்பால் வழியே சர்க்கரை பரவுமா?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன. இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் என்கிறார்கள். அது உண்மையா, குழந்தை பிறந்தால் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
கர்ப்பகால நீரிழிவு என்பது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால், அது பிற்காலத்தில் நீரிழிவாக மாறாமல் இருக்க, இப்போதிலிருந்தே கவனமாக இருக்கவும்.
நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.
நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சக்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது, தாய்ப்பால் குடிப்பதால் குழந்தையின் குளுக்கோஸ் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக அந்தக் குழந்தைக்கு இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கத் தொடங்கும்.

குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது குழந்தை பிறந்து வெளியே வந்ததும் அதற்கு ரத்தச் சர்க்கரை அளவானது குறையத் தொடங்கும். எனவே, குழந்தை பிறந்ததும் தாய்க்கு நீரிழிவு இருந்தாலும் அடிக்கடி அதற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது அவசியம். இதன் மூலம் குழந்தைக்கு ஹைப்போகிளைசிமியா எனப்படும் தாழ சர்க்கரை நிலை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
எனவே, நீரிழிவு உள்ள அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு நீரிழிவு வந்துவிடும் என பயப்படத் தேவையில்லை. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதற்கான அலாரமாக இதை எடுத்துக் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















