செய்திகள் :

Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!

post image

பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைப் பற்றி பேசுவதற்கு பெண்கள் கூச்சப்படுவதாலும், இன்று மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்பகப் புற்றுநோய் மாதம் (பிங்க் அக்டோபர்) அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக சுகாதார அமைப்பு இந்த வருட தீமாக 'ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, ஒவ்வொரு பயணமும் முக்கியமானது' என்று பொருள்படும் Every Story is Unique, Every Journey Matters என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை நெல்லை கேன்சர் சென்டரில் பணியாற்றும் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் சாரதா அவர்களிடம் கேட்டோம்.

Pink October
Pink October

"பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் தற்போது, உலக அளவிலும், இந்தியாவிலும் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் இருக்கிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 லட்சம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். அதில் 80 ஆயிரம் பேர் இறந்துவிடுகின்றனர்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், அவர்களையெல்லாம் 100% குணப்படுத்தியிருக்க முடியும். போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், இறுதி நிலையில்தான் வருகின்றனர்.

அதுவும் அதிகமாக இளம்பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்" என்று வருத்தப்பட்டவர் தொடர்ந்தார்.

"பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வரவே பயப்படுகின்றனர். சிகிச்சைப் பற்றி சரியான முறையில் அவர்களிடம் எடுத்துக் கூறினால், அவர்கள் நிச்சயம் சிகிச்சைக்கு வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வராமல் அவர்களைக் குணப்படுத்த முடியாது அல்லவா?

40 வயதில் காலடி எடுத்து வைத்தவுடன், பெண்கள் அனைவரும் கட்டாயமாக Breast Cancer Screening (Mammogram) செய்து கொள்ளவேண்டும். பிறகு, மார்பகத்தில் புற்றுநோய் இருந்தால் Bioxin Test-ம் செய்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகம் தவிர்த்து, மார்பில் உள்ள கட்டிகளை மட்டும் நீக்கலாம்.

டாக்டர் சாரதா
டாக்டர் சாரதா

பெண்கள் 20 வயதிலிருந்து மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மாதந்தோறும், மாதவிடாய் முடிந்தபின் முதல் வாரம் இதை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா; மார்பகத்தைத் தொட்டு ஏதேனும் திரவம் வடிகிறதா, கட்டி உள்ளதா, மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் உள்ளதா, கால்புப் பகுதியில் மாற்றம் உள்ளதா, நிணநீர் கணுக்களில் வீக்கம் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும். இதை வழக்கமாக செய்து வரும்பட்சத்தில், ஏதேனும் ஒரு நிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடித்து மருத்துவரிடம் சென்றுவிடலாம்.

மார்பகத்தின் தோலில் ஏதேனும் மாற்றம் அல்லது மார்புகளில் கட்டி இருந்தால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதை வெளியே சொல்லாமல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பல பெண்கள் இறப்பதற்கு இதுவே காரணம்.

ஒருவிதத்தில், மார்பகப் புற்றுநோய் தலைமுறையாக வரக்கூடியது. ஒரு பெண்ணின் தாய்க்கோ அல்லது அத்தைக்கோ மார்பகப் புற்றுநோய் இருந்தால், உடனே அந்தப் பெண்ணும் மார்பகப் பரிசோதனையை மருத்துவமனையில் செய்துகொள்ள வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுகள், உடல் பருமன், மரபு, ஹார்மோன் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது ஆகியவை அவற்றில் சில. சில சமயங்களில், மார்பகப் புற்றுநோய் வருவதன் காரணம் தெரியாமலும் போகலாம்.

மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, சீக்கிரம் நோயைக் கண்டுபிடிப்பதே நல்ல சிகிச்சைக்கும், அதிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கும் வழிவகுக்கும். அதனால், பெண்கள் சுயபரிசோதனை செய்ய பழகுங்கள். தயக்கமின்றி மருத்துவர்களை அணுகுங்கள்" என்கிறார் டாக்டர் சாரதா.

Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?

Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாக... மேலும் பார்க்க

இந்த சிம்பிள் டிப்ஸ் மழைக்காலத்துல நம்மை ஆரோக்கியமா வெச்சுக்கும்!

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே. இந்தப் பிரச்னைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மர... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை காட்டிக்கொடுக்கும் ட்ரோபோனின் டெஸ்ட்; 40 ப்ளஸ்ஸில் அவசியமா?

Doctor Vikatan: நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவோருக்குச்செய்யப்படுகிற ட்ரோபோனின் டெஸ்ட் பற்றி சமீபத்தில் இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்கள். 40 வயது தாண்டிய அனைவருமேஇதயநலனைத் தெரிந்துகொள்ள ட்ரோபோனின் ... மேலும் பார்க்க

Health: அட்டையில் ஒட்டிய மாத்திரை; ஓப்பன் செய்த மருந்து பாட்டில் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

நமக்கு நல்லது செய்கிற, பிரச்னைகளைச் சரி செய்கிற மாத்திரை, மருந்துகள் சில நேரம் கெட்டதும் செய்யலாம். அது நிகழாமல் தடுக்க நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்களை இங்கே சொல்கிறார் பொது நல மருத்துவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தீபாவளி விருந்து; விதம்விதமான ஸ்வீட்ஸ், கார வகைகள், டயட் சோடா குடிக்கலாமா?

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவோராகஇருந்தாலும், தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் அன்று ஒருநாள்டயட்டை பின்பற்றுவது சாத்தியமாகாது. அதே சமயம், விதம் விதமான விருந்து, இனிப்பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

Doctor Vikatan: தீபாவளிக்குச் செய்கிற லேகியத்தில் என்ன ஸ்பெஷல்? அதை தீபாவளி அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டுமா, மற்ற நாள்களிலும் சாப்பிடலாமா? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச்... மேலும் பார்க்க