செய்திகள் :

இந்த சிம்பிள் டிப்ஸ் மழைக்காலத்துல நம்மை ஆரோக்கியமா வெச்சுக்கும்!

post image

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே.

இந்தப் பிரச்னைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மருந்து இருக்கிறது என்கிறார் கன்யாகுமரியைச் சேர்ந்தவரும் மணிப்பால் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான சித்த மருத்துவர் அருள் அமுதன். அவர் தரும் கை வைத்தியக் குறிப்புகள் இங்கே.

மழைக்காலம்
மழை.

``சித்தர்கள் ஒரு வருடத்தை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என்று 6 பருவங்களாகப் (Seasons) பிரித்துள்ளனர். இயற்கையின் இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் அவர்கள் விரிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர். இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற ஆரம்பித்தால் மழையோ, குளிரோ, வெயிலோ நம்மை எதுவும் செய்துவிடாது.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்த்தாதுகளும் மனித உடலுக்குள் உண்டு. இந்த மூன்றும் தன் அளவைவிட மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் வரும்.

இதைப் போலவே பூமிக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் உண்டு. குறிப்பாக, மழைக்காலங்களில் (கார்காலம், கூதிர்காலம்), பூமியின் கபம் அதிகரிக்கும், பித்தம் குறையும். மழைக்காலத்தைத் தொடர்ந்து வரும் குளிர் அல்லது பனிக்காலத்தில், (முன்பனிக்காலம், பின் பனிக்காலம்) கபத்துடன், வாதமும் சேர்ந்து அதிகரிக்கும்.

இந்த அதிகரிப்புதான் மனிதனுக்குள்ளும் கபத்தன்மையையும் வாதத்தன்மையையும் அதிகரித்து இந்தக் காலகட்டங்களில் குறிப்பிட்ட நோய்களைத் தருகின்றன.

குறிப்பாக, பூமியின் கபத்தன்மை அதிகரிப்பதால், பல கிருமிகள் பெருகி வாழும். இவை நமக்கு நோய்களை ஏற்படுத்தும். இந்தக் காலம் மாறிவிட்டால் இந்நோய்களும் தானாகக் காணாமல் போய்விடும். இந்தக் காலகட்டத்தில், நம்மை எப்படி நாம் பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதுதான் நம் கண்முன் இருக்கும் சவாலே.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

மழை மற்றும் குளிர்காலங்களில் கபம் அதிகரிக்கும்போது சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலைபாரம், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற தொல்லைகள் வரும். வாதம் அதிகரிக்கும்போது சிலருக்குக் கை கால்வலி, தோல் வறட்சி, நரம்பு - எலும்பு வலிகளும் உண்டாகும். மேற்சொன்ன இந்த அறிகுறிகளிலிருந்து நமக்கு வந்திருக்கும் பிரச்னை கபத்தினாலா, வாதத்தினாலா என்பதைப் பகுத்தறிய முடியும்.

வெளியிலிருந்து, அதாவது பூமியிலிருந்து நம்மை தாக்கும் கபத்திலிருந்து நம்மை பாதுகாக்க கபத்தை குறைக்கும் உணவு, மூலிகைகள் மற்றும் வாழ்வுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உடலைக் குளிர்வித்து கபத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், இளநீர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மிகக் குறிப்பாக, ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பண்டங்களை இந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேபோல இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் கபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

சளித்தொல்லை
சளித்தொல்லை

உடலின் வெப்பத்தை அதிகரித்து, கபத்தைக் குறைக்கக்கூடிய கத்திரிக்காய், வழுதனங்காய் (நீண்ட பச்சை கத்திரிக்காய்), சுண்டைக்காய், மணத்தக்காளி, நார்த்தங்காய், வெற்றிலை, தூதுவளை போன்ற வெப்பத்தை அதிகரிக்கும் காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் தினமும் கண்டிப்பாக ரசம் வைத்து உண்ண வேண்டும். குறுமிளகு (நல்ல மிளகு), மஞ்சள், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், சின்ன வெங்காயம் போன்றவை ரசத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

நம் வீட்டின் சமையலறையிலும், அஞ்சறைப் பெட்டியிலும் இருக்கும் இந்த மருந்துப் பொருள்கள் மூலம் செய்யப்படும் ரசம் நிச்சயம் மனதையும் உடலையும் இதமாக்கும்.

நீங்கள் எப்போதும் வைக்கும் ரசத்தில் வெற்றிலையை நறுக்கிச் சேர்த்தால் அது வெற்றிலை ரசமாகிவிடும். இந்த வெற்றிலை ஒரு நல்ல மருந்து. சளி சுரப்பதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிலைக்கு நிகர் வெற்றிலைதான்.

ரசம்
ரசம்

எப்படி வெற்றிலை சளி சுரப்பைக் கட்டுப்படுத்துமோ அதேபோல, உருவாகும் சளியை வெளியே தள்ளுவதில் துளசி சிறந்தது. எனவே, சளிப்பிடித்தவர்கள் வெற்றிலை ரசத்தைச் சாப்பிடுவது போலவே துளசியையும் ரசமாகச் செய்து பருகலாம். அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். ரசமாகப் பருக விருப்ப மில்லை எனில், தேநீர் தயாரிக்கும்போது துளசியையும் சேர்த்துத் தேநீர் தயாரித்துப் பருகலாம்.

மழைக்காலத்தில் நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒரு மூலிகை தூதுவளை. இந்தத் தூதுவளைக் கீரையைச் சட்னி செய்து சாப்பிடலாம். அல்லது தூதுவளையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

இதை நீங்கள் உணவில் சேர்த்து வரவர சளி உங்கள் பக்கம் வரவே வராது. சித்த மருத்துவ மூலிகைகளான தூதுவளை, கண்டங்கத்திரியால் செய்யப்பட்ட பொடிகள், லேகியங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவையும் மழை மற்றும் குளிர் காலங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நொச்சி இலை
நொச்சி

மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம் போன்றவையும் கூடவே வந்துவிடும். இவற்றைச் சரிசெய்யவும் ஓர் இயற்கை வழி இருக்கிறது. நாட்டுமருந்துக் கடைகளில் நொச்சி இலை கிடைக்கும். இதை வாங்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஆவி (வேது) பிடிக்க வேண்டும். இந்த நொச்சி இலை கிடைக்கவில்லையென்றாலும் கவலை வேண்டாம்.

வெறும் நீரில் உப்புபோட்டுக் கொதிக்க வைத்து அதில் ஆவிபிடிக்கலாம். இது நுரையீரல் மற்றும் மூக்கின் பக்கத்திலுள்ள சைனஸ் அறைகளில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும். அங்கே நுழைந்துள்ள கிருமிகளையும் கொல்லும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதை விரட்டவும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து அதை அடுப்பில் காட்டி எரியவிடுங்கள்.

பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள். இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமல்லாமல் கிருமிகளை அழித்து மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைச் சுத்தமாக வைத்திருக்கவும் இது உதவும்.

மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய நல்ல மிளகை ஊசியில்குத்தி, நெருப்பில்காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க சளியால் அடைத்த மூக்கை உடனே திறக்கும்.

சுக்குமல்லி காபி
சுக்குமல்லி காபி

சுக்கு, மல்லி விதை (தனியா) ஆகியவற்றுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபியைத் தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்தச் சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டு மானாலும் குடிக்கலாம்.

குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே வெந்நீர் அல்லது மேலே சொன்ன சுக்கு மல்லி காபியை அருந்தி சுகம் பெறலாம்.

நிலவேம்புக் குடிநீர் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதோடு காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் தடுப்பு மருந்தாகவும் இது திறம்படச் செயலாற்றும் தன்மை கொண்டது.

நிலவேம்புக் குடிநீர்
நிலவேம்புக் குடிநீர்

காய்ச்சல் வந்துவிட்டால் சுக்கு, குறுமிளகு, மல்லி (தனியா), துளசி, வெற்றிலை போன்றவற்றை நீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி குடித்தால் வியர்வை வெளியேறி காய்ச்சல் மற்றும் சளி தீரும்.

பொதுவாக எந்த மிதமான நோய்களுக்கும் மூன்று நாள்கள் கைவைத்தியம் பார்க்கலாம். அதற்குப் பிறகும் காய்ச்சல், சளி குறையாவிட்டால், உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா, டைபாய்டு, மலேரியா, கோவிட் தொற்று மற்றும் வைரல் காய்ச்சல்கள் எனப் பல வகையான நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருவதால் நோயைச் சரியாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது மிகமிக அவசியம்'' என்கிறார் மருத்துவர் அருள் அமுதன்.

எல்லா பருவ காலத்திலும் ஆரோக்கியமாக இருப்போம்..!

Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?

Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாக... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை காட்டிக்கொடுக்கும் ட்ரோபோனின் டெஸ்ட்; 40 ப்ளஸ்ஸில் அவசியமா?

Doctor Vikatan: நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவோருக்குச்செய்யப்படுகிற ட்ரோபோனின் டெஸ்ட் பற்றி சமீபத்தில் இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்கள். 40 வயது தாண்டிய அனைவருமேஇதயநலனைத் தெரிந்துகொள்ள ட்ரோபோனின் ... மேலும் பார்க்க

Health: அட்டையில் ஒட்டிய மாத்திரை; ஓப்பன் செய்த மருந்து பாட்டில் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

நமக்கு நல்லது செய்கிற, பிரச்னைகளைச் சரி செய்கிற மாத்திரை, மருந்துகள் சில நேரம் கெட்டதும் செய்யலாம். அது நிகழாமல் தடுக்க நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்களை இங்கே சொல்கிறார் பொது நல மருத்துவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தீபாவளி விருந்து; விதம்விதமான ஸ்வீட்ஸ், கார வகைகள், டயட் சோடா குடிக்கலாமா?

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவோராகஇருந்தாலும், தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் அன்று ஒருநாள்டயட்டை பின்பற்றுவது சாத்தியமாகாது. அதே சமயம், விதம் விதமான விருந்து, இனிப்பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

Doctor Vikatan: தீபாவளிக்குச் செய்கிற லேகியத்தில் என்ன ஸ்பெஷல்? அதை தீபாவளி அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டுமா, மற்ற நாள்களிலும் சாப்பிடலாமா? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச்... மேலும் பார்க்க

Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?

நாளை தீபாவளி ‌என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..? வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்... மேலும் பார்க்க