Rohit Sharma : திணறடித்த ஹேசல்வுட்; தடுமாறி மீண்ட ரோஹித்; தவறிப்போன சதம்!
Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?
Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாகவும், பிறகு ஒரு மருத்துவர் வந்து அதைச் சரி செய்ததாகவும் பார்த்தோம். இப்படியெல்லாம் கூட நடக்குமா, இது எப்படிப்பட்ட பிரச்னை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பது இல்லை என்றாலும், வழக்கமாகப் பார்க்கக்கூடிய விஷயம்தான். இந்தப் பிரச்னையை 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர்' (Temporomandibular joint disorder) என்று சொல்வோம். 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' (Temporomandibular subluxation) என்றும் சொல்வதுண்டு.
நமது மண்டை ஓட்டுடன் நமது தாடை சேர்ந்து நிற்கக்கூடிய இடம்தான் டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் எனப்படும்.
நம்முடைய உடலில் கை, கால் மூட்டுகள், இடுப்பு மூட்டுகள் என பல இணைப்புகள் இருப்பதைப் போல டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் என்பதும் மிக முக்கியமான ஓர் இணைப்பு.
அந்த இணைப்பு இருப்பதால்தான் நம்மால் பேச முடிகிறது, சாப்பிட முடிகிறது. வாய்வழியே செய்யக்கூடிய பல விஷயங்களையும் செய்ய முடிகிறது.

டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட்டில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உதாரணத்துக்கு, பாக்டீரியா தொற்று, தசை பலவீனம் போன்ற பாதிப்புகளில் தாடைப் பகுதி பலவீனமாக வாய்ப்புகள் உண்டு.
அப்போது தாடையில் உள்ள எலும்பானது, மண்டை ஓட்டில் உள்ள சாக்கெட்டில இருந்து விலகுவதைத்தான் 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' அல்லது 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்லொகேஷன்' என்று சொல்கிறோம்.
தோள்பட்டை இணைப்பானது சிலருக்கு நழுவிப் போவதைக் கேள்விப்பட்டிருப்போம். தோள்பட்டை இணைப்பு இறங்கிவிட்டதாகச் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படி நழுவியதை சரிசெய்ய சிகிச்சைகள் உள்ளன. சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
அப்படித்தான் டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர் பிரச்னையும். வாயைப் பெரிதாகத் திறந்து கொட்டாவி விடும்போதோ, அதிகபட்ச சோகம் அல்லது ஸ்ட்ரெஸ்ஸில் பெரிதாக அழும்போதோகூட வாய் திறந்த நிலையில் மாட்டிக் கொள்ளும். இதை 'ஓப்பன் லாக்' என்று சொல்வோம்.

இதற்கான சிகிச்சை மிக எளிதுதான். அடிக்கடி இந்தப் பிரச்னை வந்த அனுபவம் உள்ளவர்கள், வாயை அசைத்து அசைத்து தானாகவே சரி செய்து கொண்டு விடுவார்கள்.
முதல்முறை வரும்போது சிலருக்கு இதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை.
ரொம்பவும் பெரிதாக கொட்டாவி விடாமல் பார்த்துக்கொள்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது, தசைகளில் பலவீனம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவை இந்த விஷயத்தில் முக்கியம். மற்றபடி, இது பெரிய அளவில் பயப்படக்கூடிய பிரச்னை எல்லாம் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.