ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக ...
Rohit Sharma : திணறடித்த ஹேசல்வுட்; தடுமாறி மீண்ட ரோஹித்; தவறிப்போன சதம்!
அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. அணியின் சீனியர் வீரரான ரோஹித் அரைசதத்தை கடந்து 73 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். கடந்த போட்டியில் சோபிக்காத ரோஹித் இந்தப் போட்டியில் எப்படி அரைசதத்தை கடந்தார்?

பெர்த்தில் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். குட் லெந்தை பிடித்து சீராக ஆஸ்திரேலியா பௌலர்கள் வீசிய டெலிவரிக்கள், கடந்த போட்டியில் ரோஹித்தை திணறடித்தது. இந்த முறையும் அதே டெக்னிக்தான். பவர்ப்ளேக்குள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், ஹேசல்வுட், பார்ட்லெட் ஆகியோர் 50% டெலிவரிக்களை குட் லெந்தில் மட்டுமே வீசியிருந்தனதர். குறிப்பாக, ஹேசல்வுட் ரோஹித்தை நிற்க வைத்து சொல்லியடித்து திணறடித்தார்.
ஹேசல்வுட் குட் லெந்தில் இன்கம்மிங்காக வீசிய டெலிவரிக்களை எதிர்கொள்ள ரோஹித் ரொம்பவே சிரமப்பட்டார். ஹேசல்வுட்டின் டெலிவரிக்களை அவரால் டிபண்டே செய்ய முடியவில்லை. ஹேசல்வுட்டை ரோஹித் திணறடித்தார் என்பதை விட நிலைகுலைய செய்தார். ஒரு திட்டமே இல்லாமல் எப்படியாவது சர்வைவ் ஆகினால் போதுமெனும் நிலைக்கு ரோஹித்தை தள்ளினார். மார்ஷூம் ஹேசல்வுட்டின் முதல் ஸ்பெல்லை பெரிய ஸ்பெல்லாக வீச வைத்தார்.

ஹேசல்வுட் ஒரே மூச்சில் 7 ஓவர்களை வீசினார். பதற்றத்தில் இருந்த ரோஹித் ஒரு ரன் அவுட்டிலிருந்து டைவ் அடித்து தப்பித்தார். ஹேசல்வுட்டின் டெலிவரிலேயே ஒரு LBW மற்றும் எட்ஜ்ஜில் Close Call இல் தப்பித்தார். ஹேசல்வுட் வீசிய முதல் இரண்டு ஓவர்களுமே மெய்டன். அந்த இரண்டு ஓவர்களிலுமே ரோஹித்தான் முழுமையாக ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹேசல்வுட்டுக்கு எதிராக ரோஹித் சந்தித்த முதல் 20 பந்துகளையும் டாட் மட்டுமே ஆக்கியிருந்தார். ரோஹித் ரன் சேர்க்க முடியாமல் திணறியதால் கில் கொஞ்சம் ஷாட்களுக்கு சென்று ரிஸ்க் எடுத்தார். அதனால் அவரின் விக்கெட்டும் விழுந்தது. வந்த வேகத்திலேயே கோலியும் டக் அவுட் ஆனார். ரோஹித்தின் மீது இன்னும் அழுத்தம் கூடியது.
முதல் 10 ஓவர்களின் முடிவில் ரோஹித் 43 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரால் அவர் நினைத்தபடிக்கு ஷாட்களை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. ஆனால், எப்படியோ சர்வைவ் மட்டும் ஆகிவிட்டார். ஆஸ்திரேலியாவும் ரோஹித்தின் விக்கெட்டுக்காக அவசரப்பட்டு இரண்டு ரிவியூவ்களை இழந்திருந்தது. நம்பர் 4 இல் ஸ்ரேயாஷ் வந்திருந்தார். அவர் ரோஹித்துக்கு கொஞ்சம் ஒத்துழைத்தார். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடினார். 19 வது ஓவரில்தான் ரோஹித் கொஞ்சம் நிதானமாகி வழக்கமான நிலைக்கு வந்தார்.

மிட்செல் ஓவன் வீசிய அந்த ஓவரில் புல் ஷாட்டோடு தொடர்ந்து இரண்டு சிக்சர்களை ரோஹித் பறக்கவிட்டார். இதன்பிறகுதான் ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரிக்க ஆரம்பித்தது. ரோஹித் எதிர்கொண்ட முதல் 62 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 50 க்கும் கீழ். 73 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஸ்டார்க்கின் பந்தில் ஸ்கொயரில் ஒரு ஷாட் ஆட முயன்று ரோஹித் அவுட் ஆகையில் 97 பந்துகளில் 73 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 75. அந்த இரண்டு சிக்சர்களுக்கு பிறகு ரோஹித் கொஞ்சம் வேகமெடுத்துவிட்டார். டாட்களை குறைத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். ஷம்பா, கனோலி, ஷார்ட் என ஸ்பின்னர்கள் வீச இவர்களை சௌகரியமாக எதிர்கொண்டு சில பவுண்டரிக்களையும் ரோஹித் அடித்தார். ஸ்டார்க்கையும் அட்டாக் செய்ய முயன்றே அவுட் ஆனார்.
இந்தத் தொடர் ரோஹித்துக்கு கொஞ்சம் வித்தியாசமானது. இங்கே அவர் கேப்டன் கிடையாது. அவர் கேப்டனாக இருந்த வரைக்கும் கவலையேப்படாமல் அதிரடியாக ஆடுவார். முதல் 10 ஓவர்களில் எவ்வளவு அதிகமாக ரன்களை சேர்த்துக் கொடுக்க முடியுமோ சேர்த்துக் கொடுப்பார்.

பவர்ப்ளேயில் அட்டாக் செய்வது மட்டும்தான் அவரின் வேலை. அதில் சறுக்கினாலும் பரவாயில்லை. அவர்தான் கேப்டன். அவரின் இடத்துக்கு பிரச்னை இல்லை. ஆனால், இந்தத் தொடரிலிருந்து நிலைமை வேறு. அந்த அழுத்தம் ரோஹித்திடம் இருப்பதை அவரின் ஆட்டத்தில் உணர முடிகிறது.