போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்...
கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும் சகோதரத்துவமும்!
மலேசியாவில் நடந்த 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி தொடரில் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்கி, ஹை-ஃபை செய்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட இந்த சம்பவம் வேறு சில கேள்விகளை எழுப்புவதையும் தவிர்க்க முடியவில்லை.

சமீபத்தில், ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்திருந்தது. அதில், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு வெற்றிக்கோப்பையையும் இந்திய அணி வாங்காமல் தவிர்த்தது. கிரிக்கெடில் அவ்வளவு தேசப்பற்றோடு நடந்துவிட்டு ஹாக்கியில் மட்டும் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கி உறவாடுவது ஏன்?
உண்மையில் சொல்லப்போனால், கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வெளிக்காட்டியது தேசப்பற்றல்ல. அது ஒரு அரசியல். தேசத்தை ஆளும் அரசு செய்ய நினைக்கும் அரசியலை இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியும் களத்தில் செய்திருந்தது. அதற்கு சூத்திரதாரியாக இருந்தது பாஜகவின் முன்னாள் எம்.பியும் இந்திய அணியின் இப்போதைய பயிற்சியாளரான கம்பீர்தான்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் எப்போதோ அரசியல் கலந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் இல் ஆட தடைவிதிக்கப்பட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் வீரியமாக கிரிக்கெட்டுக்குள் தேசப்பற்று அரசியலை புகுத்த ஆரம்பித்தனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2013 இல்தான் ஒரு இருதரப்புத் தொடரில் ஆடியிருந்தது. அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கோ பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ வரவில்லை. வெறுமென ஐ.சி.சி தொடர்களில் மட்டுமேதான் இரு அணிகளும் ஆடிக்கொண்டிருந்தன. இடையில் சில சமயங்களில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆட வேண்டிய சூழலெல்லாம் ஏற்பட்டது. அந்த சமயத்திலெல்லாம் பிசிசிஐ கிரிக்கெட் அரங்கில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி விதிகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டது.

இன்னொரு பக்கம் இருபுறமிருந்தும் அரசியலர்களும் நட்சத்திரங்களும் கிரிக்கெட்டை முன்வைத்து தங்களின் வெறுப்பரசியலை தவறாமல் கக்கிக் கொண்டிருப்பவர். இதெல்லாம் மக்களுக்குள் சகோதரத்துவத்தை குலைப்பதாகவே அமைந்தது. அர்ஷ்தீப் சிங், ஷமி என இந்திய அணி பாகிஸ்தானுடன் தோற்ற சமயத்தில் மதச்சிறுபான்மை வீரர்கள் குறிவைத்து இணைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
விராட் கோலி போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே அவர்கள் தாக்கப்பட்டதற்கான மெய்யான காரணத்தை முன்வைத்து, 'எங்களின் சகோதரத்துவத்தை ஒரு போதும் குலைக்க முடியாது.' என பாதிக்கப்பட்ட வீரர்களுடன் நின்றனர். உங்களுக்கு அப்படி நியாயமாக தேசப்பற்று இருக்கிறது, அதை வெளிக்காட்ட விரும்புகிறீர்கள் எனில் அதை எல்லா இடத்திலும் காட்ட வேண்டும். அதைவிடுத்து கூட்டம் கூடும் இடத்தில் வியாபாரத்துக்கு கடை விரிப்பதை போல மக்களின் கவனம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் அரசியல் செய்யக்கூடாது.

கிரிக்கெட்டை கடந்து சமீபத்தில் இந்த இந்தியா - பாகிஸ்தான் வெறுப்பரசியலால் அதிகம் பாதிக்கப்பட்டது நீரஜ் சோப்ராதான். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற காலத்திலிருந்தே பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் அவருக்கு இருக்கும் நட்பை முன்வைத்து அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இடையில் ஈட்டி எறிதல் விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாக பெங்களூருவில் ஒரு பிரத்யேக தொடரை நடத்த நீரஜ் சோப்ரா திட்டமிட்டிருந்தார். அதற்காக பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அவரின் நண்பரான அர்ஷத் நதீமுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பிறகுதான் ஆபரேஷன் சிந்தூர் சம்பவமும் நடக்கிறது. உடனே நீரஜ் சோப்ரா மீது ஒரு கும்பல் பாய்ந்துவிட்டது.
அது எப்படி நீங்கள் பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பு விடுப்பீர்கள்? உங்களுக்கு தேசப்பற்று இல்லையா? நீங்கள் இந்தியர்தானா? என அவர்மீது அத்தனை துவேச கேள்விகள். தனி நபர் பிரிவில் குறிப்பாக தடகளத்தில் ஒரு பதக்கம் வெல்வதே இந்தியாவுக்கு கனவாக இருந்தது. நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு ஒன்றல்ல இரண்டு பதக்கங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு தங்கமும் உண்டு. ஒலிம்பிக்ஸில் பதக்கம் கொடுக்கும் போது தங்கம் வென்றிருக்கும் தேசத்தின் தேசிய கீதத்தை மட்டும்தான் ஒலிக்க விடுவார்கள். பல ஆண்டுகள் ஒலிம்பிக்ஸ் அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலித்ததற்கு காரணமாக இருந்தவர் நீரஜ் சோப்ரா. அரசியலுக்காக அவரின் தேசப்பற்றை ஒரு கும்பல் கேள்வி கேட்கிறதெனில் அவர்களின் உண்மையான நோக்கம் தேசப்பற்றா அல்லது தேசப்பற்று வெறியூட்டி தங்களுக்கு சாதகமான அரசியல் லாபத்தை அறுவடை செய்வதா என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.

விளையாட்டு எப்போதுமே மக்களை ஒன்றிணைப்பதற்கான கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். விளையாட்டில் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கிக் கொள்வது ஒரு சகோதரத்துவத்தின் அடையாளம். மைதானத்தில் விறுவிறுப்பாக ஆடும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கும். இரண்டு அணியின் வீரர்களும் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒருவரையொருவர் முறைத்துக் கொள்வார்கள். ஆனால், அப்படி செய்பவர்கள் கூட ஆட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி புன்னகைத்துவிட்டு செல்வார்கள்.
மைதானத்தில் நடந்ததை மைதானத்தோடு விட்டுவிடுவோம். இந்த பவுண்டரி லைனை கடந்துவிட்டால் நீயும் நானும் சகோதரன், நமக்குள் எந்த வெறுப்பும் கிடையாது என்பதுதான் அந்த கைகுலுக்கலுக்கான அடையாளம். மைதானத்தின் உள் நடக்கும் சண்டைகள் வெளியில் சென்ற பிறகு நீடிக்கக்கூடாது என்பது விளையாட்டின் அடிப்படை அறம். ஆனால், இப்போதோ மைதானத்துக்கு வெளியே இருக்கும் சண்டைகளும் அரசியலும் கூட மைதானத்துக்குள் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.

கைகுலுக்கலின் உன்னதத்தையும் அர்த்தத்தையும் கம்பீரும் அறிவார். ஏனெனில், அவர் வீரராக இருந்தபோது அவரும் பலருடனும் சண்டையிட்டு, பின்னர் போட்டியின் முடிவில் கைகுலுக்கி சமாதானமாகியிருக்கிறார். ஒரு முன்னாள் வீரராக இருந்து பயிற்சியாளர் ஆகியிருந்தால் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாமென கம்பீர் கூறியிருக்கவே மாட்டார். அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்துவிட்டல்லவா பயிற்சியாளரானார்!
விளையாட்டு வீரர்களை விடுவோம்... நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியே, இந்தியா வெற்றி பெற்றதும், `மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர். இங்கும் இந்தியாவுக்கே வெற்றி’ என்கிறார். ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்... மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் என போட்டு இருப்பாரா? எத்தனையோ பகை நாடுகள், விளையாட்டின் மூலம் இணைந்த சம்பவங்கள் இருக்கிறதே.
கிரிக்கெட், ஒரு விளையாட்டு. மைதானத்தில் மோதுபவர்கள் விளையாட்டு வீரர்கள். எல்லையில் மோதும் ராணுவ வீரர்கள் அல்ல.
இதோ இப்போது 21 வயதுக்குட்பட்ட இந்திய ஹாக்கி அணியினர் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கியிருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்லப்போகிறீர்கள்? தேசப்பற்றே இல்லாதவர்கள் என முத்திரை குத்தப் போகிறீர்களா?
இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ள தேசப்பற்று ஒன்றும் ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கை அல்ல. மேலும், விளையாட்டு இதையெல்லாம் கடந்தது, எல்லைகளற்றது. விளையாட்டின் வழி சகோதரத்துவத்தை வளர்க்கப் பாருங்கள். இல்லையேல் உங்களின் அரசியல் சாகசங்களை மைதானங்களுக்கு வெளியே மட்டுமாவது நடத்திக் கொள்ளுங்கள்.