சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கா...
Usain Bolt: "இந்திய உணவுகளில் இதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது" - உசைன் போல்ட்
இந்தியாவிற்கு வந்திருக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் 'NDTV' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், "14 வருடத்திற்கு முன்பு நான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன்.
அப்போது என்னால் இங்கிருக்கும் உணவுகளைச் சரியாக ருசிக்க முடியவில்லை. அதனால் இந்த முறை இங்குள்ள உணவுகளை ருசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதல் தடவை வந்தபோது மட்டனுடன் ரொட்டி சாப்பிட்டேன். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த இறைச்சி நன்றாக இருந்தது.
ஜமைக்காவில் இறைச்சி வேறு மாதிரியாக இருக்கும். இங்கு வேறு மாதிரி இருந்தது.
அதுமட்டுமல்லாமல் நிறைய இளம் தடகள வீரர்களை இந்த முறை சந்திக்க இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து தடகளப் போட்டியில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் குறித்துப் பேசிய அவர், "ஆரம்பத்தில் காயங்கள் ஏற்படும் போது கடினமாகத்தான் இருந்தது.
ஆனால் எனது பயிற்சியாளர் க்ளென் மில்ஸைச் சந்தித்த பிறகு அவர் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தார்.
காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்று என்னிடம் சொல்வார். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்.
அவர்தான் எனக்கு இரண்டாவது தந்தை மாதிரி. தடகளத்தில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அறிவுரை வழங்குவார்.
அவருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.