பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
ரோஹித்தின் கேப்டன்சியை பறித்தது ஏன்; அகர்கார் கூறும் காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்' என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக்குழு.
மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன் பதவி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் வசம் செல்லப்போகிறது என்ற பேச்சு அடிப்பட்டபோதே, ஐ.பி.எல் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித்.

அவ்வாறே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்டிங்கில் கோலியின் இடத்திலும் களமிறங்கிய கில் அந்தத் தொடரை சமன் செய்து நற்பெயரை வாங்கினார்.
அதைத்தொடர்ந்து, ஒருநாள் அணிக்கும் கில்தான் அடுத்த கேப்டன் என்ற பேச்சு எழுந்தது.
இத்தகைய சூழலில்தான், ஆஸ்திரேலியாவுக்கெதிராக அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கார்.
அதில், ஒருநாள் அணியில் சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியும், சாம்பியன்ஸ் டிராபியில் கில்லுக்கு வழங்கப்பட்டிருந்த துணைக் கேப்டன் பதவி ஸ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கேப்டன்சி மாற்றம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அஜித் அகர்கார், "ரோஹித், கோலி விளையாடும் ஃபார்மெட் இதுதான்.
அணியில் இருக்க தேவையான அனைத்து விஷயங்களையும் அவர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை வெகு தொலைவில் உள்ளது. இப்போது அதைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
வெளிப்படையாக இதுவொரு கேப்டன்சி மாற்றம். அதற்கு சில காரணங்களும் இருக்கிறது.

நடைமுறையில் மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது சாத்தியமற்றது.
அடுத்து வரும் உலகக் கோப்பையை நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது மிகக் குறைவாக ஆடப்படும் ஃபார்மெட் இதுதான் (ODI).
எனவே அடுத்த வீரருக்கு நிறைய போட்டிகள் கிடைக்காது. அவர் சாம்பியன்ஸ் டிராபி வெல்லவில்லை என்றாலுமே இது கடினமான முடிவுதான்.
இருப்பினும் சில சமயங்களில் எதிர்காலத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும். அணியின் நலனைப் பார்க்க வேண்டும்.
இப்போதோ அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகோ எடுக்க வேண்டிய முடிவு இது.
அந்த முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மற்றவரிடம் இன்னொரு ஃபார்மெட்டை வழிநடத்தும் நம்பிக்கையைப் பெற போதுமான வாய்ப்பை வழங்க வேண்டும்.
ஒருவர் வெற்றிகரமாக இருக்கும்போது இப்படியொரு முடிவை எடுப்பது எப்போதும் கடினம்தான்.

மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது மிகவும் கடினம்.
தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாது, பயிற்சியாளர்களுக்கும் கடிதம்தான். மூன்று வெவ்வேறு கேப்டன்களுடன் திட்டமிடுவது அவர்களுக்கு ஒருபோதும் எளிதானது அல்ல" என்று ரோஹித்தை நீக்கி கில்லை கேப்டனாக்கியதற்கான காரணங்களை எடுத்துரைத்தார்.
ஒருநாள் தொடருக்கான அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, அக்சர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முஹமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால்.
India’s squad for Tour of Australia announced
— BCCI (@BCCI) October 4, 2025
Shubman Gill named #TeamIndia Captain for ODIs
The #AUSvIND bilateral series comprises three ODIs and five T20Is against Australia in October-November pic.twitter.com/l3I2LA1dBJ
டி20 தொடருக்கான அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.