செய்திகள் :

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ.க...” என்று பலவாறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சபாநாயகரான அப்பாவுகூட, “திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுபோல, அரசியலில் நடிப்பதற்கு அமித் ஷாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய்...” என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார். இப்படி, நாலாபுறமும் விஜய்யையும் பா.ஜ.க-வையும் இணைத்து வைத்து பேச்சுகள் எழுந்துள்ள சூழலில், த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகளிடமிருந்து அக்கருத்துக்கு மறுப்போ, ஆதரவோ இதுவரையில் வெளிவரவில்லை. என்னதான் நடக்கிறது இவ்விவகாரத்தில்... டெல்லியின் பல்ஸ் என்ன..?

பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “கரூரில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தில் 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் அளிக்கவும், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தனிப்பட்ட முறையில் ரிப்போர்ட் அளிக்கவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை கரூருக்கு அனுப்பிவைத்தது பிரதமர் அலுவலகம். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கரூருக்கு வந்த அவர்கள் இருவரும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். 41 உயிர்களைப் பலிவாங்கிய வேலுசாமிப்புரம் சாலையிலும் ஆய்வு செய்தனர்.

‘இவ்வளவு பேர் கூடியிருந்தபோது, சாலையின் இருபுறமும் ஏன் போலீஸார் தடுப்புகளைப் போட்டார்கள்... விஜய்யின் வாகனம் எங்கே நின்றது, எப்படி வெளியேறியது... கரன்ட் கட் ஏன் ஆனது...’ என்று பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்ட நிர்மலா சீதாராமன், அவர்கள் சொன்ன பதிலை உள்வாங்கிக் கொண்டார். நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரித்து தகவல்களைச் சேகரித்தார். அடுத்தநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிர்மலா சீதாராமான், கரூரில் நடந்த நிகழ்வு குறித்து விவரித்திருக்கிறார். ‘இறந்தவர்களில் 15 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றுமறியாத குழந்தைகளும் பெண்களும் இறந்திருக்கிறார்கள். காவல்துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது...' என்று நிர்மலா சீதாராமன் சொல்லவும்தான், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு எட்டு பேர்கொண்ட பா.ஜ.க எம்.பி-க்கள் குழுவையும், தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவரையும் அனுப்ப முடிவானது.

அமித் ஷா

தி.மு.க வட்டாரங்களெல்லாம், கரூர் சம்பவத்தின் முழு பொறுப்பையும் விஜய் தலையின் மீது ஏற்றிவிட்டார்கள். அரசியல்ரீதியாக தனிமைப்பட்டு போனார் விஜய். 'இந்தச்சூழலில் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டினால், உங்கள் பக்கம் அவர் சாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால், நீங்கள் பேசி தைரியம் சொன்னால்தான் சரியாக இருக்கும்...’ என்று அமித் ஷாவுக்கு ஆலோசனை சொன்னது, கிண்டிக்காரர்தான். அதைத்தொடர்ந்தே, விஜய்யுடன் பேசுவதற்கான முன்னெடுப்பை எடுத்தது அமித்ஷா அலுவலகம். பேசுவதற்கு விஜய் சம்மதிக்கவும், தன் நம்பிக்கைக்குரிய சிலரை நீலாங்கரையிலுள்ள விஜய்யின் வீட்டுக்கு அனுப்பி, அவர்களின் போனில் விஜய்யுடன் பேசினார் அமித் ஷா.

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமித் ஷா, ‘நடந்தது பெரும் துயரம். இக்கட்டான இந்தத் தருணத்தில், உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். அரசியல்ரீதியிலான தாக்குதல்களைப் பார்த்து கவலைப்படாதீர்கள்...’ என்று ஆறுதல் சொல்லவும், நடந்த சம்பவம் குறித்து விஜய்யும் சில விவரங்களை அமித் ஷாவிடம் சொல்லியுள்ளாராம். தான் சி.பி.ஐ விசாரணை கோரியிருப்பதையும் கூறியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்த டெலிபோன் பேச்சின் முடிவில், விஜய்க்கு நம்பிக்கைத் தரும் வார்த்தைகளும் அமித் ஷாவிடமிருந்து வெளிவந்துள்ளன. இவர்களின் உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்தே, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணையப்போகிறார்' என்ற தகவல் றெக்கைக்கட்டிப் பறக்கிறது.

எடப்பாடி பழனிசாமி!

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் விஜய் இணைவது எங்களுக்கு பலம்தான். ஆனால், 'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவர் கூட்டணிக்கு வருவாரா... வந்தால், எவ்வளவு சீட்டுகளை எதிர்பார்ப்பார்...’ என்பதெல்லாம் கேள்விக்குறி. விஜய்யை வளைப்பதற்கு, ஆறுதல் அஸ்திரத்தைக் கையில் எடுத்து வலையை விரித்திருக்கிறது டெல்லி. அரசியல் தாக்குதல்களால் தனிமைப்பட்டுப் போயிருக்கும் விஜய்க்கு, டெல்லியின் அனுசரணையான வார்த்தைகள் ஆறுதலைத் தந்திருக்கின்றன. கூட்டணியில் இணைவது குறித்தெல்லாம் அவர்தான் முடிவெடுக்க முடியும்...” என்றனர் விரிவாக.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தன்னுடைய கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தியபோதே, ‘என்னுடைய கொள்கை எதிரி பா.ஜ.க; அரசியல் எதிரி தி.மு.க' என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்தார் விஜய். இந்தச் சூழலில், கரூர் துயரத்தில் விஜய் தனிமைப்பட்டுப் போயிருப்பதை உணர்ந்து, அவருக்கு பாசக்கரம் நீட்டியிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க-வும்கூட, ஆறுதலான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. விஜய்யின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து, மத்திய உள்துறையில் விவாதமெல்லாம் நடைபெறுகிறது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் அரசியலை விஜய் புரிந்துகொள்ளாமல் இல்லை.

தவெக தலைவர் விஜய்
விஜய்

கடந்தமாதம் நடந்த த.வெ.க-வின் செயற்குழுவிலேயே, ‘முதல்வர் வேட்பாளர் விஜய்தான்' என்பதை தீர்மானமாகவே போட்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு பலம்கொடுக்க விஜய் தயாராக இல்லை. தவிர, தி.மு.க-விடம் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளில்தான் விஜய் பெருமளவு பதம் பார்க்கிறார். இப்படியான சூழலில், பா.ஜ.க-வுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால், விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ள சிறுபான்மை சமூக வாக்குகள்கூட கிடைக்காது. வரக்கூடிய தேர்தலில், ஜெயித்தாலும் தோற்றாலும், தனக்கென ஒரு வாக்குவங்கியை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் விஜய். அதனால்தான், தனக்கு ஆறுதல் சொன்ன அமித்ஷாவுக்கு, தன் வீடியோ பதிவில் நன்றிகூட சொல்லவில்லை விஜய். அவருக்கு வயதும் இருக்கிறது காலமும் இருக்கிறது. ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் இணைவது என்பது, சாத்தியமில்லாத விஷயம்தான்" என்றனர்.

தனக்குள்ள வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் விஜய் செல்லமாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், அவரை எப்படியாவது வளைத்து கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாகவே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டது டெல்லி. விஜய் மனதில் கொளுந்துவிட்டு எரியும், ‘தி.மு.க எதிர்ப்பு' நெருப்பின்மீது நெய்யை ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது, விரைவிலேயே தெரிந்துவிடும்.

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க