Bison Black & White Visuals-க்கு தனியா Light பண்ணினோம் -DOP Ezhil Arasu |Marisel...
வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்
தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்டத்திலுள்ள ‘விழி’ப்பான ஜூனியர் அமைச்சர், ‘சாமி’யாடும் சீனியரைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறாராம். வரக்கூடிய தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியான நிலையாம். இந்த நிலையில், தன் கைக்கு அடக்கமான ஒரு ஆளை ‘விழி’ப்பான ஜூனியர் அமைச்சர் இடத்துக்குக் கொண்டுவர முடிவுசெய்திருக்கிறாராம் ‘சாமி’யாடும் சீனியர்.
ஒருவேளை அது நடக்காமல் போனால், ‘தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்கிற கதையாக, ஜூனியரின் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கவும் திட்டமிட்டு வருகிறாராம். ‘சாமி’யாடும் சீனியரின் இந்த அரசியல் விளையாட்டுக்கு, ‘சூரியக் கட்சி வலுவாக இருக்கும் ஒரு தொகுதியையும் இப்படி தன்னுடைய சுயலாபத்துக்காக ‘தாரை’வார்க்கப் பார்க்கிறாரே...’ என்று கடும் எதிர்ப்பு கிளம்பிருக்கிறதாம். இது தொடர்பாகத் தலைமைக்கு விரைவில் புகாரும் பறக்கலாம் என்கிறார்கள் விவரப் புள்ளிகள்!
இலைக் கட்சி பலமாக இருக்கும் மான்செஸ்டர் மாவட்டத்தில்தான், தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது அக்கட்சியின் தலைமை. ஆனால், எதிர்பார்த்த கூட்டத்தைக் கூட்ட முடியாமல் தொடக்கமே சொதப்பலானது ஊரறிந்த செய்தி. ‘சரி, சுற்றுப்பயணத் தொடக்கத்தை எப்படி மேற்கொள்வது என்பதில் சிரமம் இருக்கதானே செய்யும்...’ என்று தலைமையும் அதை எளிமையாகக் கடந்துவிட்டது. தொடர்ந்து பல மாவட்டங்களில், அதிக கூட்டத்தோடு சுற்றுப்பயணம் வெற்றிநடை போட்ட நிலையில், இடையில் ஒரு முறை மான்செஸ்டர் மாவட்டத்துக்கு வந்தது தலைமை.
அப்போதும்கூட எதிர்பார்த்தளவு கூட்டம் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் பின்னணியில் சில சீனியர்கள் இருப்பதாகச் சந்தேகப்படுகிறாராம் அந்த மாவட்ட மாஜி. அதனால், சீனியர்களைப் புறம் தள்ளிவிட்டு, புது முகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவுசெய்துள்ளாராம். விஷயம் கேள்விப்பட்ட சீனியர்கள், ‘நாடாளுமன்றத் தேர்தலின்போதிருந்தே கட்சிப் பணி மீதான ஆர்வம் மாஜிக்குக் குறைந்துவிட்டது. பிரச்னையைத் தன்மீது வைத்துக்கொண்டு, பழியை நம்மீது போடுகிறாரே...’ என்று பொருமுகிறார்கள் அந்த சீனியர்கள்!
தலைநகர் தி.மு.க மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான ‘சக்கர’ புள்ளியின் தொகுதி குறித்து, தலைமைக் கழகத்தில் சமீபத்தில் பேசப்பட்டிருக்கிறது. அப்போது ‘சக்கர’ புள்ளிமீதும் அவரின் சகோதரர் மீதும் நிர்வாகிகள் பலரும் ஏகப்பட்ட புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘சென்னை மண்டலப் பொறுப்பில் உள்ள ‘சக்கர’ புள்ளியின் சகோதரர், எதிர்த் தரப்போடு அண்ட் கோ போட்டுக்கொண்டு ஓவராக ஆட்டம் போடுகிறார்’ என்று புலம்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
அதைக் கேட்டு கண் சிவந்த தலைமை, ‘மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... ஒழுங்கா இருக்க முடியாதா..?’ என ‘சக்கர’ புள்ளிக்கு வசமாகக் குட்டுவைத்திருக்கிறது. “தலைமையிடமிருந்து இப்படி டோஸ் விழுமென கொஞ்சமும் நினைக்கவில்லை சக்கரப்புள்ளி. விரைவிலேயே அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதோடு, அவரது சகோதரரின் பதவியும் பறிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, பெரியளவில் கூட்டணி அமைக்கும் முஸ்தீபில் செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க. அதன்படி, புதுக்கட்சி ஒன்றின்மீது குறியாய் இருக்கும் அ.தி.மு.க., அந்தக் கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டுவர காய்களை நகர்த்திவருகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க-வின் ‘இன்பமான’ எம்.பி ஒருவர், அதில் மண்ணை அள்ளிப் போடுவிதமாக நடந்துக்கொண்டிருக்கிறாராம்.
அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த எம்.பி, ‘அந்தப் புதுக் கட்சி தலைமை, ஆளும் தரப்பை பார்த்துப் பயந்துபோய் எங்கள் மடியில் வந்து அமர்ந்திருக்கிறார்’ என்று பேசிவிட்டாராம். இவ்விவகாரம் அ.தி.மு.க தலைமையின் காதுகளுக்குச் செல்லவே, ‘உங்களை யார் அப்படி பேசச் சொன்னது... உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க...’ என வறுத்தெடுத்துவிட்டதாம் தலைமை. ‘விளையாட்டாகப் பேசியது நமக்கே வினை ஆகிவிட்டதே’ என அப்செட்டில் அடக்கி வாசித்துவருகிறாராம் அந்த ‘இன்பமான’ எம்.பி!
நவம்பர் 27-ம் தேதி, ‘மாவீரர் நாள்’ கூட்டத்தை, நகர்புறங்களில் நடத்துவதுதான் கதைசொல்லியார் கட்சியின் வழக்கம். கடந்தாண்டு, சென்னை அருகே மதுராந்தகத்தில்தான் கூட்டம் நடந்தது. இந்த ஆண்டுக்கான கூட்டத்தை, தலைநகர் சென்னை அல்லது திருச்சியில் கூட்டி, ஈழம் தொடர்பாகப் பேச பலரும் பெரியளவில் ஆர்வமாக இருந்தனராம். ஆனால், ‘கூட்டத்தை காரைக்குடியில் நடத்தலாம்’ என்று சொல்லிவிட்டாராம் கதைசொல்லியார்.
‘வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், காரைக்குடியில் அவர் போட்டியிட இருப்பதாலேயே, அங்கு கூட்டத்தைக் கூட்ட முடிவெடுத்துவிட்டார். மாவீரர் நாள் நிகழ்வில் அரசியல் கலப்பதை யாரும் விரும்பாத நிலையில், தேர்தல் அரசியலையே கலந்துவிட்டார் அண்ணன்...’ என்று புகைச்சலைக் கிளப்புகிறார்கள் நிர்வாகிகள்!