கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனைய...
கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை வசதி கோரும் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவே பிரதான சாலையாக இருப்பதால் அன்றாடம் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் மக்களும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வரும் மாணவர்களும் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.




இப் பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் பேசும்போது,
``இந்தச் சாலை அமைத்து குறைந்தது பத்து வருடங்கள் ஆகிறது. இவ்வாறு முற்றிலும் சேதமடைந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாகிறது. மழைக்காலங்களில் இந்தச் சாலையில் நடக்கக் கூட முடிவதில்லை. பள்ளங்கள் நிரம்பி, தண்ணீர் தேங்கி நின்று, வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. வீதியில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் வெளியில் சென்றாலே அச்சத்திலே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என தங்களுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
கே.பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சரோஜா இதுபற்றி பேசும்போது,
"அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடம் வந்து கால்ல உழுந்து ஓட்டு மட்டும் கேக்குறாங்க. நாங்க ரோடு கேட்டா மட்டும் கண்டுக்காமலே போறானுங்க. என் பசங்க பேர புள்ளைங்க எல்லாம் இந்த ரோடு வழியா தான் போறாங்க. எனக்கு அவங்க வீடு திரும்புற வரையும் பொக்கு பொக்குனே இருக்கும். ஒவ்வொரு நாளும் இங்க போராட்டம் தான். நானும் இந்த ஊர்காரங்களும் எங்க ஊர் தலைவரை எங்க பார்த்தாலும் ரோடு போடச்சொல்லி கேக்குறோம் ஆனா, அவர் காதில வாங்கின பாடு இல்லை. இனிமே யார் இந்த பட்டிக்காட்டில ரோடு போட போறாங்க அவ்ளோ தான் இப்படியே மிச்ச காலத்தை கழிக்க வேண்டியதுதான்" என்கிறார் சரோஜா.




கல்லூரி மாணவி வினிதா இதுகுறித்து பேசிய போது,
"நான் இப்போ காலேஜ் படிக்கிற... ஆனா, நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே இந்த ரோடு இப்படி தான் இருக்கு. ஒருமுறை வேற சில இடங்களில் சாலை அகலப்படுத்தும் பெயரில் எங்க ரோடு பக்கத்துல மண் அகழ்ந்துவிட்டுட்டு போய்ட்டாங்க அதே, இங்க ரெண்டு லோடு மண் கொட்டுங்ன்னு கேட்ட போதும் யாரும் காதில் வாங்காம போய்ட்டாங்க. எந்தத் தலைவரும், அதிகாரியும் எங்களையும் எங்க வாழ்வாதாரத்தை பத்தியும் கவலைப்படலை" என்றார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை நீடிக்கும் இச்சாலையின் தூரம் குறைவு என்றாலும், எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அரசும் அப்பகுதியின் ஊராட்சியும் விரைவில் சாலை சீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. அதுவே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. 0