Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையு...
தூத்துக்குடி: இரு தரப்பு மோதலில் இளைஞர் கொலை - 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது!
தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், நேற்று இரவு தன் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியோடியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கிருஷ்ணராஜபுரத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நாகராஜ் தாளமுத்துநகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது கோஷ்டியில் இருந்துள்ளார். பிரகாஷின் எதிர் கோஷ்டியான அருண்குமார் மற்றும் திரவியராஜ் ஆகியோர் இவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் 7 அடிதடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் கோஷ்டியினர், திரவியராஜ் மற்றும் அருண்குமார் கோஷ்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், துபிசன், ஹரிகரன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திரவியராஜ் கோஷ்டியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹரிகரன் பிரகாஷை கொலை செய்யும் நோக்குடன் அவரது வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஆனால், கடந்த 19-ம் தேதியன்று தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் பிரகாஷை வேறு ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரகாஷ் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பிரகாஷ் கோஷ்டியைச் சேர்ந்த யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. இந்த நிலையில்தான் நேற்றிரவு கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவில் பைக்கில் வந்து கொண்டிருந்த நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இக்கொலை வழக்கில் கார்த்திக், ஹரிகரன் மற்றும் 4 இளஞ்சிறார்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.