`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
`ஆசை' பட பாணியில் மனைவி, 2 மகன்கள் கொலை செய்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). சிரஞ்சீவியின் மனைவி ரேவதி(46). இந்த தம்பதியினருக்கு ரித்விக் ஹர்ஷத்(15), தித்விக் ஹர்ஷத்(11) என இரண்டு மகன்கள். சிரஞ்சீவி தாமோதர குப்தா சென்னை அண்ணாசாலை பகுதியில் சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவரின் வீடு இன்று காலை நீண்ட நேரமாக பூட்டியிருந்தது. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போதும் வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் தெரியவில்லை. இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கழிவறையில் ரத்த வெள்ளத்துக்குள் சிரஞ்சீவி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
படுக்கையறையில் முகத்தில் பாலித்தீன் கவரால் சுற்றப்பட்ட நிலையில் ரேவதி, ரித்விக், தித்விக் ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் நான்கு பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு போலீஸார் தேடிய போது சிரஞ்சீவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் `தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் எதையும் இதற்கு மேல் திருப்பி செலுத்த முடியாத காரணத்துக்காக சிரஞ்சீவி என்னும் நான் எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்கிறோம். எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல அதை எல்லோருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் கடிதத்தில் சிரஞ்சீவியும் ரேவதியும் கையெழுத்திட்டிருந்தார்கள். மேலும் உறவினர்களின் போன் நம்பர்களும் எழுதப்பட்டிருந்தன. கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், தொழிலதிபர் சிரஞ்சீவி யார், யாரிடம் எல்லாம் கடன் வாங்கியிருந்தார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் கூறுகையில், ``தொழிலதிபர் சிரஞ்சீவி வசதியாக குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கடன் ஆகியிருக்கிறது. அந்தக் கடன் சுமையால் அவர் நிம்மதியை இழந்திருக்கிறார். அதனால் வீட்டிலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மனைவியோடு சேர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.
வேதனையில்லாமல் மரணம் அடைவது எப்படி என சமூக வலைதளங்களில் தேடிய சிரஞ்சீவியின் கண்ணில், 'ஆசை' திரைப்படத்தில் மனைவியை பாலித்தீன் கவரால் மூடி கொலை செய்யும் காட்சி பட்டிருக்கிறது. அதன்படி மனைவி, மகன்களின் முகத்தை பாலித்தீன் கவர்களால் மூடியிருக்கிறார் சிரஞ்சீவி. அதனால் மூன்று பேரும் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேரின் சடலங்களிலும் பாலித்தீன் கவரால் முகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து கழிவறைக்குச் சென்ற சிரஞ்சீவி, தன் கழுத்தைத் தானே கத்தியால் அறுத்து தற்கொலை செய்திருக்கிறார். அதனால் கழிவறை முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது. இவர்கள் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில்தான் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவரும். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.