விழுப்புரம்: இரவு முழுவதும் தொடர்ந்த மழை; புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த தண்ணீ...
பார்த்ததும் திருமணம்; பெண் கிடைக்காத விவசாயிகள் டார்கெட் - மகாராஷ்டிராவை மிரட்டும் திருமண மோசடி
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் இளம் விவசாயிகள் 40 வயது வரை திருமணம் செய்ய முடியாமல் இருக்கின்றனர். எனவே ஏதாவது பெண் இருப்பதாக தகவல் கிடைத்தால் பணம் கொடுத்தாவது திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண் வீட்டார் தங்களது மகள்களை விவசாயிகளுக்கு திருமணம் செய்து கொடுக்க தயங்குகின்றனர். அவர்கள் நகரங்களில் நல்ல வேலையில் இருக்கும் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்புகின்றனர். ஏற்கனவே பருவம் தவறிய மழை மற்றும் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக போலி திருமணங்கள் விவசாயிகளை மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.
விவசாயிகளுக்கு பெண் கொடுக்காததை பயன்படுத்திய ஒரு கும்பல், திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை ஏமாற்றி வருகிறது. அதுவும் ஏழை, ஆதரவற்ற பெண்கள் என்று கூறி பெண்களை விவசாயிகளிடம் ஏஜென்டுகள் அறிமுகம் செய்கின்றனர்.

ஏற்கனவே பெண் கிடைக்காமல் இருக்கும் விவசாயிகள், அப்பெண்ணுக்கு அனைத்து செலவுகளையும் செய்து தங்க நகைகளை வாங்கி அணிவித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அப்பெண்ணை அறிமுகம் செய்த ஏஜென்ட்கள் 2 லட்சம் வரை கமிஷன் வாங்கிக்கொள்கின்றனர்
திருமணமான சில மாதங்களில் அப்பெண்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நகை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர் அல்லது சண்டையிட்டுக்கொண்டு சென்றுவிடுகின்றனர் ஜல்காவ் பகுதியில் மட்டும் இது போன்ற திருமண மோசடி தொடர்பாக சமீபத்தில் 4 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே போன்று புனே பகுதியில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு இது போன்ற மோசடிகள் அதிகரித்து விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
புனே அருகில் உள்ள கோதாட் என்ற இடத்தில் வசிக்கும் துகாராம்(36) என்பவர், தனது திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் பெண் கிடைக்காமல் இருந்தது. அவரை ஒரு ஏஜென்ட் உறவினர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு பெண் இருப்பதாக தெரிவித்தார். பெண் பெற்றோரை இழந்தவர் என்றும், அவருக்கு யாரும் இல்லை என்றும், புனேயில் தனது அத்தை வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து துகாராம் கூறுகையில், பெண் இருப்பதாக சொன்ன ஏஜென்ட் ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட பெண் உட்பட 8 பேருடன் எங்களது வீட்டிற்கு வந்தார்.
வழக்கமான பேச்சுவார்த்தைக்கு பிறகு திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் திருமணத்தை அதே நாளில் நடத்தவேண்டும் என்று பெண் வீட்டார் தெரிவித்தனர். நாங்கள் ஒரு வாரம் கழித்து திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னோம். ஆனால் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் பெண் வீட்டார் உறுதியாக இருந்தனர். இதனால் அன்று மாலையே திருமணம் நடந்தது. ஏஜென்ட்டிற்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுத்தோம். பெண்ணிற்கு தங்க ஆபரணங்கள் எடுத்தோம். ஆனால் திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் அப்பெண் மாயமாகிவிட்டார்.

அடுத்த சில நாட்களில் அப்பெண்ணின் புகைப்படம் வேறு ஒரு திருமணத்தில் மணப்பெண்ணாக இருந்தது. இதையடுத்து நாங்கள் போலீஸில் புகார் செய்தோம்'' என்று தெரிவித்தார். இதே போன்று கோலாப்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமூக சேவகர், ஆதரவற்ற பெண் என்று கூறி அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்ணின் உண்மையான வயது கூட தெரிந்துகொள்ளாமல் அந்த நபர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண் சில மாதங்களில் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அப்பெண் குறித்து விசாரித்தபோது அவர் ஜல்காவில் இருப்பது தெரிய வந்தது.
அதோடு அந்த பெண் ஆதரவற்றோர் கிடையாது என்றும், பெற்றோருடன் வசிப்பதும், அப்பெண் மீது திருமணம் செய்து மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. அப்பெண்ணை பிடித்து விசாரித்தபோது, தனது குடும்பம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருந்ததால் திருமண மோசடி கும்பலுடன் சேர்ந்ததாக தெரிவித்தார். திருமணம் முடிந்த சில மாதங்களில் ஓடி வந்துவிடலாம் என்றும், அதிக அளவில் பணம் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தான் இது வரை மூன்று பேரை திருமணம் செய்திருப்பதாகவும் அவர் போலீஸில் தெரிவித்தார். அப்பெண்ணிற்கு 17 வயதுதான் ஆகிறது. ஏழை பெண்களை தேடி கண்டுபிடித்து திருமண மோசடி திட்டத்திற்கு இக்கும்பல் பயன்படுத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இம்மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் இதனை வெளியில் சொல்லக்கூட தயங்கிக்கொண்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.