`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
Womens World Cup: மீதமிருக்கும் ஓர் இடம்; மோதும் 3 அணிகள் - இந்தியாவுக்கான வாய்ப்பு என்ன?
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 - நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா (6-ல் 5 வெற்றி), ஆஸ்திரேலியா (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது - 1 ), இங்கிலாந்து (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது - 1) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

அதேபோல், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் வங்காளதேசம் (6-ல் 1 வெற்றி), பாகிஸ்தான் (6-ல் 2 டிரா) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன.
இப்போது, புள்ளிப்பட்டியலில் தலா நான்கு புள்ளிகளுடன் 4, 5, 6 ஆகிய இடங்களில் இருக்கும் இந்தியா (5-ல் 2 வெற்றி), நியூசிலாந்து (5-ல் 1 வெற்றி, 2 டிரா), இலங்கை (6-ல் 1 வெற்றி, 2 டிரா) ஆகிய அணிகள் அரையிறுதியில் காலியாக அந்த ஒரு இடத்துக்குப் போட்டியில் இருக்கின்றன.
இலங்கை அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?
இலங்கை அணி நாளை மறுநாள் (அக்டோபர் 24) பாகிஸ்தானுடன் மோதும் தனது கடைசி லீக் போட்டியில் வென்றாலும் அரையிறுதிக்கு முன்னேறுவது மிகக் கடினம்.
அதாவது இலங்கை அணியின் ரன்ரேட் -1.035 என பாதாளத்தில் இருப்பதால் முதலில் இலங்கை vs பாகிஸ்தான் மழையால் தடைபடக்கூடாது. இரண்டாவது இப்போட்டியில் இலங்கை கட்டாயம் வென்றாக வேண்டும்.

மூன்றாவது நாளை நடைபெற இருக்கும் இந்தியா vs நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். நான்காவது இந்தியாவும் (vs வங்காளதேசம்), நியூசிலாந்தும் (vs இங்கிலாந்து) தங்களின் கடைசி போட்டியில் தோற்க வேண்டும்.
இந்த நான்கு அதிசயங்களில் ஒன்று நடக்காமல் போனாலும் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற முடியாது.
நியூஸிலாந்துக்கான சாத்தியக்கூறுகள் என்ன?
இலங்கை அணியைப் போல நியூசிலாந்து அணிக்கு அவ்வளவு கஷ்டங்கள் இல்லை.
நாளைய போட்டியில் இந்தியாவையும் (அக்டோபர் 23), அக்டோபர் 26-ம் தேதி இங்கிலாந்தையும் வீழ்த்தினால் நியூசிலாந்து அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
ஆனால், நாளைய போட்டியில் தோற்றுவிட்டு, இங்கிலாந்துடன் வெற்றிபெற்றாலும் அரையிறுதிக்கு முன்னேறுவது மிக மிக கடினம்.

ஏனெனில், நியூசிலாந்தின் தற்போதைய ரன்ரேட் -0.245 என இருக்கிறது.
ஒருவேளை, நாளைய போட்டி டிரா ஆனால், இங்கிலாந்தை நியூசிலாந்து கட்டாயம் வீழ்த்தி, வங்காளதேசத்துடன் இந்தியா தோற்றால் அரையிறுதிக்கு நியூசிலாந்து முன்னேறலாம்.
அரையிறுதிக்குச் செல்ல நியூஸிலாந்துக்கு இவை தவிர வேறு வழியில்லை.
இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
இலங்கை, நியூசிலாந்து அணிகளை விட இந்தியாவுக்கு பெரிதாக அரையிறுதிக்கான நெருக்கடி இல்லை.
நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினாலே அரையிறுதியில் இந்தியாவுக்கான இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
அதேபோல் நாளைய போட்டியில் தோற்றாலும், இங்கிலாந்துடன் நியூசிலாந்து தோற்க, தனது கடைசி போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஏனெனில் இந்தியாவின் ரன்ரேட் தற்போது +0.526 என இருக்கிறது.

ஒருவேளை நாளைய போட்டி கைவிடப்பட்டு, கடைசிப் போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா தோற்று மறுபக்கம் இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றாலோ அல்லது நாளைய போட்டி கைவிடப்பட்டு இந்தியாவும், நியூசிலாந்து தங்களின் கடைசி போட்டியில் தோற்று மறுபக்கம் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியிருந்தாலோ அரையிறுதிக்கு இந்தியாவால் முன்னேற முடியாது.
இதில் ஒன்று மாறினாலும் அரையிறுதியில் மிஞ்சியிருக்கும் ஒரு இடமும் இந்தியாவுக்குத்தான்.
இந்த எளிதான வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.