`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
"காங்கிரஸ் கட்சியை மதிப்பவர்கள் மட்டுமே முதலவராக முடியும்" - மாணிக்கம் தாகூர்
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், `வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ரயில்வே பொது மேலாளர் கலந்து கொண்ட மதுரைக் கூட்டத்திலும் வலியுறுத்தினோம். ஆனால் போதிய பயணிகள் அந்த ரயிலில் விருதுநகரில் இருந்த முன்பதிவு செய்யவில்லை. முன்பதிவு அதிகரித்தால் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களைத் திரட்டிப் போராட வேண்டியது வரும்” என்றார்.
`ஆந்திராவில் கூகுள் நிறுவனம் தொழில் முதலீடு செய்துள்ளது. ஏன் தமிழகத்தில் செய்யவில்லை?’ என்ற கேள்விக்கு, “ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்ததால் தொழிலில் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், அங்கு கூகுள் நிறுவனம் வந்ததை பெரிதாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழகம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகியவை வளர்ந்த மாநிலங்களாகும். இவர்கள் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். அம்மாநிலங்களுடன் ஆந்திராவை ஒப்பீடு செய்வது தவறு.” என்றார்.

`இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஊடுருவல் காரர்களால் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே?’ என்ற கேள்விக்கு, ``இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பீஹார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர்-இல் ஊடுருவல் காரர்கள் இருப்பதாக தெரிவித்தார். அங்கு நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 3 லட்சம் பேர் தான் இஸ்லாமியர்கள். மீதமுள்ள 62 லட்சம் பேரில் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட இந்து மக்கள் தான். அதுகுறித்து அமித் ஷா பேசுவதில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் போராடினோம். அதன் பிறகே, ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. அமித் ஷாவின் முதலீடே வெறுப்பு அரசியல்தான். அதை மையப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென துடிக்கிறார். வெறுப்பு அரசியலின் மையமாக இந்தியாவின் கோயபல்ஸாக அமித் ஷா இருக்கிறார்”என்றார்.
`தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்காக இராகுல்காந்தி தமிழகம் வருகிறாரா? நடிகர் விஜய்யை சந்திக்கிறாரா? எந்தெந்த தலைவரை சந்திக்கிறார்?’ என்ற கேள்விக்கு, “இராகுல் காந்தியின் எந்த பயணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்” என தெரிவித்தார்.
``மகாராஷ்டிரா மாநில எம்.பி மேதா குல்கர்ணியின் சனிவர்வாடா பகுதியில் உள்ள மசூதி, தர்காவை இடிக்க வேண்டும் என கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு, “மிகவும் அருவருக்கத்தக்க பேச்சு. முன்னாள் மேயராக இருந்த அவர் இப்படி பேசுவது சரியல்ல. வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னத்தின் அருகே சகோதரிகள் புல்வெளியில் நமாஸ் செய்தனர். இதை மத அடிப்படையில் வெறுப்பு அரசியலாக முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட செயலை அவர் எதற்காக செய்தார் எனத் தெரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசியல் சூழலுக்காக இப்படி பேசினாரா? தங்களுக்கு ஏதாவது பொறுப்பு வேண்டும் என்பதற்காக, சுய விளம்பரம் வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.கவில் பலர் இதுபோல் பேசுகின்றனர். “இது எல்லாருக்குமான அரசு“ என மோடி கூறிவரும் நிலையில் பா.ஜ.க எம்.பிக்கள் இப்படி பேசி வருவது சரியா?. எனவே, மேதாகுல்கர்ணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்றார்.
`டோல் கட்டணம் தொடர்ந்து உயர்கிறது. உயர்த்தப்பட்ட ரயில் கட்டணமும் குறையவில்லை?' என்ற கேள்விக்கு, “பா.ஜ.க அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லை. அமைச்சர்கள் நிதின் கட்கரியும், அஷ்வினி வைஷ்னவ் ஆகியோருக்கு சாதாரண மக்களைப் பற்றி கவலையில்லை. சாதாரண மக்களின் பணங்களை அவர்களுக்கே தெரியாமல் ஜி-பே, பாஸ்ட் டிராக் என அறிவியல் திருட்டை செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நிதின் கட்கரி புதுக்கதையை கூறி வருகிறார். கப்பலூர் டோல்கேட் பற்றி அவரிடம் பலமுறை நேரில் தெரிவித்தேன். 50 கி.மீ தொலைவிற்குள் கட்டணம் கிடையாது. ஜி.பி.எஸ். முறை கொண்டு வரப்படும் என்றெல்லாம் கூறுகிறார். அனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் கற்பனைக் கதைகளைக் கொண்டே இந்த அரசை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி பேசும் போது, இந்து-முஸ்லீம் பிரச்யை உருவாக்கி விடுகிறார்கள். அப்போது மக்கள் உண்மையான விலைவாசி உள்ளிட்ட பிரச்னையை மறந்து விடுகின்றனர். இதை வைத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று விடுகிறது”என்றார்.
``2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா?" என்ற கேள்விக்கு? ``யாருக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். இருந்த போதும், விருதுநகர் காமராஜர் பிறந்த மண் என்பதால், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துரைக்கும்" என்றார்.

``விருதுநகர் தி.மு.க கைவசம் உள்ளது. ஒரே மாவட்டத்தில் இரு தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா?" என்ற கேள்விக்கு ``எல்லாருக்கும் எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். எண்ணிக்கைகள் முடிவு செய்த பின்பே இடங்கள் முடிவு செய்யப்படும்”. என்றார்.
``பீகாரில் இந்தியா கூட்டணியில் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லையே?” என்ற கேள்விக்கு, ``இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளை பிரிப்பதில் தான் பிரச்னைகள் உள்ளன. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி ஓரிரு நாட்களில் சுமூக முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்தார்.
``இந்தியா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், விட்டுக் கொடுப்பதிலும் காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு இல்லையா?” என்ற கேள்விக்கு, “அனைத்துக் கட்சிகளுக்கு பொறுப்பு உள்ளது. கூட்டணியில் விட்டுக் கொடுப்பது மட்டும் காங்கிரசின் வேலையாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை வாங்கிக் கொண்டு அமைச்சராக இருக்கலாம் என எந்தக் கட்சி நினைத்தாலும் அது நடக்காது. ஹரியானா, டெல்லியில் பலமுறை ஆம் ஆத்மியுடன் பலகட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி நடத்தியது. ஆனால், அவர்கள் உடன்படவில்லை. இதனால் ஆட்சியை இழந்தனர். தற்போது அவர் டெல்லியில் குடியிருக்க முடியவில்லை.”
`இது தமிழ்நாட்டிற்கு பொருந்துமா?’ என்ற கேள்விக்கு? ``காங்கிரஸ் கட்சியை மதித்தால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவார்கள். வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லையென்றால் முதலமைச்சராக வர முடியாது. மதித்தால் முதலமைச்சராக வர முடியும். இல்லையென்றால் முன்னாள் முதல்வராகவே இருக்க முடியும்.” என தெரிவித்தார்.