சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன?
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா கோந்நி பிரமாடம் இண்டோர் ஸ்டேடியத்தைச் சென்றடைந்தார்.
குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்ற நிலையில் ஹெலிகாப்டரின் டயர்கள் ஹெலிப்பேடில் புதைந்தது கண்டறியப்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தள்ளி மீட்டனர்.
இந்தச் சம்பவத்தால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால் இடம் மாற்றப்பட்டது.

இதுகுறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகர் கூறுகையில், "குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி ஹெலிபேட் மிகவும் தாமதமாகத்தான் தயார் செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஏற்கனவே ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் இருந்து 5 அடி தள்ளி ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. அந்த இடத்தில் கான்கிரீட் முழுமையாகக் காயாமல் இருந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை முன்னோக்கி நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்கனவே தரையிறக்க நிச்சயிக்கப்பட்ட இடத்தை நோக்கி ஹெலிகாப்டரைத் தள்ளி நகர்த்தும் நிலை ஏற்பட்டது. மற்றபடி ஹெலிகாப்டருக்கோ, குடியரசுத் தலைவர் தரையிறங்குவதிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை" என்றார்.

ஹெலிபேட் தயாராக்கியது பொதுப்பணித்துறையாகும். விமானப்படை ஊழியர்கள் அடையாளப்படுத்திய இடத்தில் கான்கிரீட் மூலம் ஹெலிபேட் ஏற்படுத்தப்பட்டதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இரவு தாமதமாகத்தான் கான்கிரீட் போடப்பட்டதாகவும், விமானப்படை ஊழியர்கள் முன்னிலையில்தான் அனைத்து பணிகளும் நடைபெற்றன எனப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் கூறுகையில், "ஹெலிபேட் கான்கிரீட்டின் பலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. H மார்க் போடப்பட்ட இடத்துக்கு முன்பே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. புதிய கான்கிரீட் என்பதால் ஹெலிகாப்டரின் வீல் அரை இஞ்ச் கான்கிரீட்டில் புதைந்துவிட்டது" என்றார்.