`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்
காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள செய்தியறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 16ம் தேதி பிறந்த அந்தப் பெண் குழந்தைதான் நாட்டிலேயே இந்தப் பெயர் சூட்டப்படும் முதல் குழந்தை.

அவரின் தந்தை, ஹம்தான் ஹதாத், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) என்ற அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு சூப் கிச்சனில் சமையல்காரராகப் பணிபுரிகிறார். இந்த அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளாக வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையை நடத்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கில்பர்ட் கோ தெரிவித்திருப்பதன்படி, கர்ப்ப காலத்தில் ஹம்தாத்தின் மனைவி அறக்கட்டளையின் சமையலறை உணவையே முழுமையாக நம்பியிருந்துள்ளார். காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் தலைவிரித்தாடுகையிலும் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மகளுக்கு சிங்கப்பூர் எனப் பெயரிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் மக்களை தான் மிகவும் நேசிப்பதகாவும் அதனால் தன் மகளுக்கு இந்த பெயரை வைத்துள்ளதாகவும் ஹமத் கூறியிருக்கிறார். குழந்தை சிங்கப்பூர் இப்போது ஒரு கூடாரத்தில் வசித்து வருகிறார்.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை இணையத்தில் பகிர்ந்துள்ளது லவ் எய்ட் சிங்கப்பூர். இது அறக்கட்டளைக்கும் அதன் பணியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அந்தப் பதிவில் கூறியுள்ளனர்.
மேலும், "மனிதாபிமானத்தின் சரியான பக்கத்தில் நின்றதற்காக சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி. லவ் எய்ட் சிங்கப்பூரில் மனிதத்துக்கு இனம், மதம் மற்றும் எல்லைகள் கிடையாது" என்றும் பதிவிட்டுள்ளனர்.