Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்தா மன்னர் பெஷாவாக்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
இக்கோட்டை இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தக் கோட்டையில் முஸ்லிம் பெண்கள் சிலர் நமாஸ் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இந்து அமைப்புகளும், வலதுசாரி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ.க எம்.பி. மேதா குல்கர்னி தனது ஆதரவாளர்களுடன் சென்று சரிவார்வாடாவில் உள்ள கோட்டைக்கு வெளியில் போராட்டம் நடத்தினார். அதோடு மேதா குல்கர்னி கோட்டையைப் புனிதப்படுத்துவதாக சடங்குகள் செய்தார்.

பசுவின் கோமியத்தை கோட்டை முழுவதும் தெளித்தார். மேலும் சிவ் வந்தனாவும் பாடப்பட்டது.
இது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் அளித்த பேட்டியில், ''சனிவார்வாடா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது நமது வெற்றியின் அடையாளம். அந்த இடத்தில் யாராவது வந்து நமாஸ் செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அங்கு யாரையும் நமாஸ் செய்ய அனுமதிக்க முடியாது. இது ஒன்றும் மசூதி கிடையாது'' என்று தெரிவித்தார்.
கோட்டையைச் சுத்தப்படுத்திய நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் அளித்த பேட்டியில், ''சனிவார்வாடாவை ஒரு புனிதஸ்தலம் போன்று பார்க்கின்றனர். அங்கு அமர்ந்து கொண்டு ராமா ராமா ராமா என்று சொன்னால் அதை நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க எம்.பி.யின் செயலை அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரூபாலி தோம்பரே கூறுகையில், “இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக அவர் [மேதா குல்கர்னி] கூறுகிறார். ஆனால் நாங்களும் இந்துக்கள்தான், மேலும் நாங்கள் இந்துக்களில் ஒருவராக இருந்தாலும் எங்கள் உணர்வுகள் சிறிதும் புண்படுத்தப்படவில்லை என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன்.
உண்மையில், புனேவின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்ததற்காக அவர் மீது வழக்குத் தொடர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் மேதா குல்கர்னியின் செயலைக் கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் நீலம் கோரே அளித்த பேட்டியில், ''யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. விதிகளை மீறினால், அந்த மக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அல்லது கலெக்டர் போன்ற அதிகாரிகள் உள்ளனர். சிலர் முழு அரசாங்கத்தையும் நடத்துவது போல் நடந்து கொள்ளக்கூடாது” என்று அவர் கூறினார்.

இச்சம்பவங்கள் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோட்டையில் நமாஸ் செய்த பெண்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கோட்டைக்குள் நுழைய நுழைவுக் கட்டணமாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் டெல்லியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே தேவைப்பட்டால் டெல்லிக்குச் செல்லவும் தயங்க மாட்டோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்ஜி அளித்த பேட்டியில், ''ஒருவரின் வழிபாட்டை இந்த முறையில் அவமதிப்பது கண்டனத்திற்குரியது. இது மிகவும் கடுமையான செயல். இந்த நாட்டின் முஸ்லிம்கள் இந்த மண்ணில் மண்டியிடுகிறார்கள், ஆனால் இந்த வெறுப்பு வெறியர்களுக்கு அது பிடிக்காது" என்று கூறினார்.