பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
தீபாவளி மகிழ்ச்சிகரமாக முடிந்துவிட்டது. இந்தத் தீபாவளிக்குப் பல குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து புது டிரஸ் அன்பளிப்பாகக் கிடைத்த அதே நேரத்தில் 100, 200 எனத் தீபாவளிப் பரிசுப் பணமும் கிடைத்திருக்கும்.
தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என ஒவ்வொருவரிடம் இருந்து குழந்தைகளுக்குக் கிடைத்த இந்தத் தீபாவளிப் பணமே 500, 1000 எனச் சேர்ந்திருக்கும். இந்தப் பணத்தை என்ன செய்யலாம் என இன்றைக்குப் பல பெற்றோர்கள் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கான பதில் இனி...
குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்த பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டு என்று விட்டுவிடுகிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. குழந்தைகளிடம் பணம் தந்து வைப்பது அவர்கள் செலவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
இன்னும் சில பெற்றோர்கள், குழந்தைகளிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்கி, "உனக்கு எப்ப வேணுமோ அப்ப கேட்டு வாங்கிக்கோ'' என்று சொல்லிவிடுகின்றனர். அந்தப் பணத்தை பீரோவில் தாங்கள் வைத்திருக்கும் பணத்துடன் சேர்த்து வைத்து விடுகின்றனர்.

இப்படிச் செய்வது குழந்தைகளிடம் வெறுப்பையே உருவாக்கும். தவிர, குழந்தைகளுக்குக் கிடைத்த பணத்தை பீரோவில் வைப்பதால், பெற்றோர்களுக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை; குழந்தைகளுக்கும் எந்தப் பயனும் இல்லை. அப்படியானால், என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?
குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்த பணத்தைச் செலவு செய்வதற்கான ஒரு விஷயமாகப் பார்க்க்காமல், எதிர்கால செலவுகளுக்கான சேமிப்பாகப் பார்க்க குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும்.
இதற்கு குழந்தைகள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடர்ந்து அவர்களின் பெயரில் போட்டு வைக்கலாம். அந்தக் கணக்கைப் பெரியவர்கள் பராமரிக்கலாம். குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க தோதுப்படவில்லை எனில், பெரியவர்கள் தங்கள் வங்கி சேமிப்புக் கணக்கிலேயே போட்டு வைக்கலாம். இப்படிப் போட்டு வைக்கும் பணத்துக்கு ஆண்டுக்கு 3% - 3.5% வரை வட்டி கிடைக்கும்.

வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைக்க விரும்பவில்லை எனில், எஃப்.டி மாதிரியான வைப்பு நிதிகளில் போட்டு வைத்தால், ஆண்டுக்கு 6% மேல் வட்டி கிடைக்க வாய்ப்புண்டு.
இதை விட அதிக வருமானம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுக்களுக்கு முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 5% - 7% வட்டி வருமானம் கிடைக்கும்.
இந்த வருமானம் போதாது; இன்னும் அதிக வருமானம் வேண்டும்; இதற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க முடியும் என்கிறவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், 10 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்க வாய்ப்பைப் பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்றாலே ஆபத்தானது. அதில் பணம் போட்டால் காணாமல் போய்விடும் என்று நினைக்கத் தேவை இல்லை. கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மிகக் குறைந்த ரிஸ்க்குகளைக் கொண்டவை என்பதால், பயம் இல்லாமல் அதில் பணம் போட்டு வைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அரசு நிறுவங்களான செபியும், ஆம்ஃபியும் கண்காணித்து வழிநடத்தி வருவதால், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அதில் பணம் போடலாம்.
வீட்டில் பீரோவில் பணத்தைப் போட்டு வைப்பதற்குப் பதிலாக இப்படிச் செய்வதால், என்ன நன்மை என்று கேட்கிறீர்களா?
முதல் காரணம், பாதுகாப்பு... வீட்டில் பணம் இருப்பதைவிட வங்கியிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் இருப்பது கூடுதல் பாதுகாப்பு.
இரண்டாவது காரணம், வீட்டில் இருக்கும் பணம் அப்படியேதான் இருக்கும். ஆனால், வங்கி அல்லது மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பணம் வளரும். ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துவிட்டு, அடுத்த ஆண்டு முடிவில் 1060 ரூபாயாக நமக்குக் கிடைப்பது லாபம் தானே? அந்த லாபம் பணம் வீட்டில் இருந்தால் கிடைக்காது இல்லை அல்லவா?

மூன்றாவது முக்கியமான காரணம், குழந்தைகளின் பணத்தை இப்படி வங்கியிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் போட்டு, அது வளர்வதை அவர்கள் பார்ப்பதன் மூலம் நாமும் வளர்ந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது இப்படிச் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் மனதில் தோன்றி, நிலைத்து நிற்கும்.
நம்முடைய பணத்தை நாமே சேமித்து பொருள்களை வாங்க வேண்டும்; யாரிடமும் கடன் கேட்கக்கூடாது என்று குழந்தைகள் நினைப்பதால், எதிர்காலத்தில் அவர்கள் தேவை இல்லாமல் கடனும் வாங்க மாட்டார்கள். பொறுப்பாக பணத்தையும் நிர்வாகம் செய்வார்கள்!
இதற்கான முதல் அடியை எடுத்துவைக்கும் கடமையும், பொறுப்பும் பெற்றோர்களிடமே இருக்கிறது!