பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Rain Alert: `இரவில் கொட்டித் தீர்க்கும் கனமழை; கலக்கத்தில் மக்கள்' - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறியதும் பெரியதுமாக மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சரிந்து விழுவதால் இன்றுடன் நான்காவது நாளாக மலை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் மலைப்பாதை மற்றும் ஊட்டிக்கு செல்வதற்கான புதிய புறநகர் சாலையின் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

மேலும், இந்த சாலைகளில் எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சீரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, " நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க

42 மண்டல குழுக்கள் (Zonal Teams) அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிலை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் 6 வட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, குன்னூர் வட்டத்தில் 21 நபர்களும், கோத்தகிரி வட்டத்தில் 21 நபர்களும் தயார் நிலையில் உள்ளனர். பேரிடரில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1077 மற்றும் 04232450034, 2450035க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் -அப் எண் 9488700588 தகவல் அளிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.