பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
வடகிழக்கு பருவமழை: தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் கொட்டிய 17 செமீ மழை; சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வங்க கடலை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்க கடலில் நேற்று இரவு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இதனால் கடலில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரையிலான வேகத்தில் காற்றடிக்கக் கூடும் என அறிவிப்பு வெளியானது.
இதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று காலைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனிடையே ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை கொட்டியது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரையிலான அதிகபட்ச மழையாகும். இதனால் தங்கச்சிமடம் நெடுஞ்சாலையில் மழை நீர் கடல் போல் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.
இதே போல் பாம்பனில் 15 செ.மீ, மண்டபத்தில் 14 செ.மீ மழை கொட்டியது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் பெய்த மழையினால் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அம்மா பூங்கா, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையைக் கொண்டாட ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகளும், கோயிலுக்கு வந்த யாத்திரிகர்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.
இதனிடையே வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் தற்போது ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.