புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார்.
கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார்.
இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார்.
மேரி வாலி பிரியாணி
ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார்.
இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார்.
அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது.

இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம்
ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார்.
ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார்.





















