பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
தஞ்சாவூர்: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; விளைந்தும் பயனில்லை; கவலையில் விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.
"டெல்டா மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக தஞ்சாவூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி பரப்பு கூடியிருப்பதுடன் விளைச்சலும் அமோகம். ஆனால் கொள்முதலில் ஏற்படும் தாமதம், தொடர் மழை போன்றவற்றால் விவசாயிகள் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை புத்தூர், நல்ல வன்னியன் குடிகாடு, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் அளவிலான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயலில் தண்ணீர் தேங்கிய நிலையில் தொடர் மழை பெய்து வருகிறது.
தண்ணீர் வயலில் இருந்து வழிவதற்கும் வாய்ப்பில்லாத சூழல். இதனால் மழையில் சாய்ந்த நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படும். விளைந்தும் மழையால் பாதிப்பைச் சந்திக்கக் கூடிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

நல்ல வன்னியன் குடிகாட்டில் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மழையால் தற்போது மகசூல் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.
ஏக்கருக்குச் சுமார் ரூ.25,000 வரை செலவு செய்திருக்கிறோம். மழை ஏற்படுத்திய பாதிப்பில் பயிர்கள் மூழ்கியதில் விளைந்தும் கூட பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நாங்கள் சந்தித்த பாதிப்பைக் கணக்கெடுக்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.