Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்
பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்ட சட்டம்தான் லோக்பால் சட்டம் (Lokpal and Lokayuktas Act, 2013).
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் தலைமையில் இந்த அமைப்பு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16 தேதி லோக்பால் அமைப்பு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு கார் என்ற அடிப்படையில், 7 பி.எம்.டபள்யூ கார் வாங்குவதற்கு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதில், `ஏழு BMW 3 சீரிஸ் Li கார்களை இந்திய லோக்பாலுக்கு வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து திறந்த டெண்டர்கள் வெளியிடப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறது.
லோக்பால் குறிப்பிட்டிருக்கும் BMW 3 சீரிஸ் Li கார் ஒன்றின் விலை ரூ.70 லட்சம். 7 கார்கள் என்றால் ரூ.3.5 கோடி செலவாகும்.
மேலும், லோக்பால் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தக் காரை இயக்குவது, அதன் மின்னணு அமைப்புகள் தொடர்பாக விளக்கமளிக்க ஏழு நாட்கள் பயிற்சி வழங்க கார் தயாரிப்பாளரான BMW-விடம் கூறப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நாட்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டிய லோக்பால் அமைப்பு, ஆடம்பரக் காரை விரும்பிக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் எக்ஸ் தள பக்கத்தில், ``ஊழல் பற்றிக் கவலைப்படாத, தங்கள் ஆடம்பரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம், அரசாங்கம் லோக்பாலை செயல்படவிடாமல் செய்திருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸின் இளைஞர் பிரிவு, ``ஒரு காலத்தில் பொறுப்புக்கூறலின் அடையாளமாக இருந்த லோக்பால் அமைப்பு இடிந்து விழுகிறது... முக்கிய நியமனங்கள் இல்லாத ஒரு அமைப்புக்கு அரசாங்கம் ஏன் சொகுசு வெளிநாட்டு கார்களை வாங்குகிறது?" எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.