இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி - தீபாவளியை முன்னிட்டு வெளியா...
புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ - வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு
புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை.
இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

இப்படியான சூழலில், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து பாதிக்கப்படுவது, பணியில் இருக்கும் போலீஸாரும்தான். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் அரங்கேறும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், பொதுமக்களை நிம்மதியிழக்கச் செய்துவிடும்.
அதேபோல வழிப்பறி, செயின் பறிப்பு, கடைகளுக்குச் செல்பவர்களின் பைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போன்ற வழக்குகள் பதிவாகாமல், புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகை முடிந்ததில்லை.
அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு, குற்றச் சம்பவங்கள் இல்லாத தீபாவளி பண்டிகையை முடிக்கத் திட்டமிட்டார் டி.ஐ.ஜி சத்திய சுந்தரம்.
அதன்படி அவர் முதல் ஸ்கெட்ச், ஐ.ஜி, டி.ஜி.பி, ஆட்சியர், நீதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த போலீஸாரை, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வரவழைத்தார்.
அத்துடன் அவர்களை சீருடை அணிந்து, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வைத்தார். பொதுவாக மேற்கண்ட உயரதிகாரிகளின் வீடுகளில் இருந்து போலீஸாரை திரும்பப் பெற்றால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், காவல்துறை உயரதிகாரிகள் அந்தப் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினார். அதேபோல காவல்துறை தலைமை அலுவலகம், சி.ஐ.டி, சிக்மா செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டவர்களையும் மக்கள் கூடும் இடங்களில் சீருடையுடன் நிற்க வைத்தார்.
அவர்களுடன் பயிற்சி பெற்ற சிறப்பு கமாண்டோக்களையும் களத்தில் இறக்கினார். இப்படி இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 2,000 போலீஸார் நகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல சீனியர் எஸ்.பி கலைவாணன், காவல்துறை கிழக்கு எஸ்.பி ஸ்ருதி, போதை தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன், நகர்ப் பகுதி தினமும் 5 முதல் 10 கிலோமீட்டர் ரோந்து சென்றார்.

அதனால் நகரத்தில் எங்கு திரும்பினாலும் போலீஸார் நின்று கொண்டிருந்ததால், ஒரு வழிப்பறியோ அல்லது திருட்டு சம்பவமோ நடைபெறவில்லை. அதனால் புதுச்சேரி போலீஸாருக்கு சமூக வலைத்தளங்களில் பாதுகாப்புகள் குவிந்து வருகின்றன.