Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி
'இனி 100% EPF பணத்தை எளிதாக எடுத்துகொள்ளலாம்' - புதிய ரூல்ஸ்கள், அதன் விளக்கங்கள்! | Q&A
நேற்று முன்தினம், மத்திய அறங்காவலர் குழுவின் 238-வது கூட்டம் நடைபெற்றது.
அதில் பி.எஃப் பணத்தைப் பாதியில் எடுப்பதற்கான பல நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...
``தற்போது என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப் பணத்தைப் பாதியில் எடுக்கலாம்?"

``அனைத்து தேவை மற்றும் காரணங்களுக்காகவும் பி.எஃப் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியாது. சி.பி.டி பட்டியலிட்ட 13 காரணங்களுக்கு மட்டுமே இந்தப் பணத்தை எடுக்க முடியும்.
ஆனால், இந்த 13 காரணங்களும் மக்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இதை எளிதாக்கும் வகையில் இந்த 13 காரணங்களும் தற்போது மூன்று வகைகளுக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அவை - அத்தியாவசிய தேவைகள் (மருத்துவம், கல்வி, திருமணம்), வீடு கட்டுவதற்கான அல்லது வாங்குவதற்கான தேவை, சிறப்பு சூழல்கள் (பேரிடர், வேலைவாய்ப்பு இழப்பு, பெருந்தொற்று...)
ஆக, இனி இந்தக் காரணங்களின் கீழ் பி.எஃப் பணத்தை எடுக்க முடியும்.
``பி.எஃப் பணத்தை எடுப்பதெல்லாம் 'ஓகே'; எவ்வளவு எடுக்க முடியும்?"
``பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க மூன்று காரணங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பார்த்தோம். ஒவ்வொரு காரணங்களுக்கு கீழும், இவ்வளவு சதவிகித தொகை எடுக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த மொத்த தொகையையும் இனி 100 சதவிகிதம் எந்தச் சிக்கலும் இல்லாமல் எடுத்துகொள்ளலாம். இதில் பி.எஃப்பில் நீங்கள் பங்களித்திருக்கும் தொகை, உங்களது நிறுவனம் பங்களித்திருக்கும் தொகை என இரண்டுமே அடங்கும்.
உதாரணத்திற்கு, மருத்துவக் காரணங்களுக்காக, பி.எஃப் பணம் எடுக்க வேண்டுமானால், நீங்கள் பி.எஃப்பிற்கு பங்களித்துள்ள குறைந்தபட்ச தொகையை வட்டியுடன் பெற முடியும் அல்லது உங்களுடைய மாத அடிப்படை சம்பளம் மற்றும் உதவித்தொகையின் ஆறு மடங்கு பணத்தை பெற முடியும்.
இந்த மொத்த தொகையை பெறுவதில் இதற்கு முன்பு பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இனி மொத்த தொகையையும் பெறுவதில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.
இது தான் தற்போதைய லேட்டஸ்ட் அறிவிப்பின் ஹைலைட்.

``கல்வி மற்றும் திருமணத் தேவைக்காக எத்தனை முறை பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க முடியும்?"
``இதுவரை, கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக மொத்தமாகவே மூன்று முறை தான் பணம் எடுக்க முடியும். ஆனால், இனி கல்வித் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து 10 முறையும், திருமணத் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து ஐந்து முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம்."
``எத்தனை நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சர்வீஸில் இருந்திருந்தால் பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்கலாம்?"
``வீட்டுத் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால், இதுவரை நீங்கள் 5 ஆண்டுகள் சர்வீஸில் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், இப்போது எந்தக் காரணத்திற்காக பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானாலும், 12 மாதங்கள் சர்வீஸில் இருந்திருந்தாலே போதுமானது."
``சிறப்பு சூழலுக்கு கீழ் பணம் எடுக்க வேண்டுமானால் இப்போது எதாவது சலுகை கொடுக்கப்பட்டுள்ளதா?"
``முன்பு, இந்தக் காரணத்தின் கீழ், பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால், அந்தக் குறிப்பிட்ட காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இனி இது தேவையில்லை. சிறப்பு சூழலின் கீழ், காரணத்தைத் தெரிவிக்காமலேயே பணம் எடுக்க முடியும். "

``பி.எஃப்பில் இருந்து மொத்தப் பணத்தையும் எடுக்க முடியுமா?"
```நிச்சயம் முடியாது. தற்போதைய அறிவிப்பின் படி, நீங்கள் பி.எஃப் கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவிகித தொகையை வைத்திருக்க வேண்டும்.
அப்போது தான் அந்தப் பணத்தையும், அதற்காக கிடைக்கும் 8.25 சதவிகித வட்டியையும் ஓய்வுக்காலத்தில் அனுபவிக்க முடியும்."
``பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க எதாவது ஆவணம் தேவையா?"
``இனி பி.எஃப் பணத்தை எடுக்க எந்தவொரு ஆவணமும் தேவையில்லை. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் தொகையும் 100 சதவிகிதம் ஆட்டோ சென்டில்மென்ட் அடிப்படையில் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்."
``ப்ரீ- மெச்சூர்ட் ஃபைனல் செட்டில்மென்ட் மற்றும் பென்சனில் ஏதேனும் மாற்றம் உண்டா?"
``முன்பு, ப்ரீ- மெச்சூர்ட் ஃபைனல் செட்டில்மென்ட்டில், பி.எஃப் தொகையை இரண்டு மாதங்களிலேயே எடுத்துகொள்ள முடிந்தது. ஆனால், இனி 12 மாதங்கள் இதற்காக காத்திருக்க வேண்டும்.
பென்சனை பெறவும் 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும்".