Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி
சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!
ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் ஜனாதிபதி சபரிமலை வருகை ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடை திறப்பு
ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க உள்ளநிலையில் 22-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஜனாதிபதி தரிசனம் செய்வதை முன்னிட்டு வரும் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார் 22-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்கிறார். நிலக்கல்லில் இருந்து கார் மூலமாக பம்பா செல்கிறார். பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டி அங்கிருந்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் பிரத்தியேக வாகனம் மூலம் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சபரிமலை சன்னிதானத்தை அடைகிறார்.

மதியம் 12.20 முதல் ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சன்னிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார். தொடர்ந்து சன்னிதானத்தில் கெஸ்ட் ஹவுஸில் உணவருந்திவிட்டு, ஓய்வெடுக்கிறார். மாலை 3 மணிக்கு பிரத்தியேக வாகனம் மூலம் மீண்டும் நிலக்கல்லை அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைகிறார்.
அன்று மாலை திருவனந்தபுரத்தில் தனியார் ஹோட்டலில் கேரள கவர்னர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார். இரவு ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர் 23-ம் தேதி காலை ராஜ்பவன் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

23-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வர்க்கலா சிவகிரி செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீநாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாலா செயிண்ட் தாமஸ் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறார். அன்று இரவு கோட்டயம் குமரகத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 24-ம் தேதி காலை கோட்டயத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கொச்சி சென்று அங்கு புனித தெரசா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு கொச்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் முதல் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆவார். அவரது வருகையைத் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.