கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும்...
ஜப்பான்: 2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட இளைஞர்; உணவு டெலிவரி நிறுவனத்திடம் சிக்கியது எப்படி?
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி 2 ஆண்டுகளில் 1,095 ஆர்டர்கள், கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை இலவசமாகச் சாப்பிட்டிருக்கிறார்.
ஜப்பானில் நாகோயா என்ற பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய டாகுயா ஹிகஷிமோட்டோ என்பவர், ஜப்பானில் இருக்கும் பிரபல 'Demae-can' எனும் உணவு டெலிவரி செயலியில் தினமும் விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்பவரிடம் வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டுப் போகச் சொல்லிவிடுகிறார்.
அதன்பிறகு, உணவு தவறான முகவரியில் டெலிவரி செய்துவிட்டதாக கஸ்டமர் கேரிடம் பேசி ஆர்டர் செய்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்கிறார்.
இதையெல்லாம் கண்டுபிடித்துவிட முடியாத, இதை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எப்படிச் செய்ய முடியும் என்று கேட்கலாம். ஆனால், அந்த நபர் உணவுகளை ஆர்டர் செய்ய 124 போலி கணக்குகளை உருவாக்கி, போலியான வெவ்வேறு முகவரிகள், வெவ்வேறு தொலைபேசி எண்கள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த யுக்தியை வைத்து இரண்டு ஆண்டுகளில், 1,095 முறை 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்து இலவசமாகவே சாப்பிட்டு ஜாலியாக இருந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த டெலிவரி நிறுவனம் ஆண்டு ரிப்போர்ட்டுகளை எடுத்துப் பார்க்கையில் 'Refund' மூலம் அதிகமான இழப்பு ஏற்பட்டதைக் கவனித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஆராயும்போது மாட்டியிருக்கிறார் இந்த டாகுயா.
இதையடுத்து உணவு டெலிவரி நிறுவனம் கொடுத்த புகாரின் பெயரில் டாகுயா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விசாரணையில் டாகுயா, "முதலில் உண்மையிலேயே தவறான முகவரிக்கு உணவை டெலிவரி செய்துவிட்டார்கள். அப்போது கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டபோது அவர்கள் ஆர்டர் செய்த பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். அதையடுத்து உணவைப் பெற்றுக் கொண்டு, டெலிவரி செய்யப்படவில்லை என்று சொன்னேன்.
அப்போதும் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்கள். அதன்பிறகு பல அழைப்பேசி எண்கள், பல போலி முகவரிகள், போலி கணக்குகளை உருவாக்கி இதைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதை என்னால் நிறுத்தவே முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
பலரும் இதற்கு உணவு டெலிவரி நிறுவனத்தின் விதிமுறைக் குறைப்பாடுகள்தான் காரணம், அதை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.