Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம்...
திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!
திருவரங்கம் என்றால் புண்ணிய நதியான காவிரிக்கு நடுவே அமைந்த தீவுப் பகுதி என்றும் அதில் திருமால் சயனத் திருக்கோலத்தில் அருள்வார் என்பதும் ஐதிகம்.
பஞ்சரங்கம்
கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஆதிரங்கம், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், திருப்பேர்நகர் என்னும் கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுவன. இவை அனைத்தும் புகழ்பெற்ற அரங்கத் தலங்கள் ஆகும்.
திருவரங்கம்
இவை தவிர்த்தும் பெருமாள் ரங்கநாதராகக் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ள திருவரங்கம்.
திருக்கோவிலூரில் இங்கிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்தத் தலம். இதை ஆதித் திருவரங்கம் என்று போற்றுகிறார்கள். கிருத யுகத்துக்கும் முந்தைய பெருமையை உடையது இந்தத் தலம் என்கிறது தலபுராணம்.

முன்னொருகாலத்தில் வேதங்களை அபகரித்துச் சென்றானாம் சோமுகாசுரன் என்னும் அசுரன். வேதங்கள் இல்லாமல் பிரமனின் படைப்புத் தொழில் தடைப்பட்டது. யாக, ஹோம வழிபாடுகள் இல்லாமல் உலகம் இருள் அடைந்தது. எனவே பிரமனும் தேவர்களும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்து வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார் என்கிறது புராணம்.
பெருமாளை சகல லோகத்திலும் உள்ளவர்கள் வழிபட ஏதுவாக அர்ச்சாவதார மூர்த்தமாக எழுந்தருள வேண்டிக்கொண்டனராம் தேவர்கள். அதற்கு இசைந்த பெருமாள், விஸ்வகர்மாவை அழைத்துப் பாற்கடலில் தான் பள்ளிக்கொண்டிருக்கும் திருக்கோலத்திலேயே திருமேனி செய்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாராம். அதன்படியே செய்ய, பெருமாள் இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கலானார் என்கிறது தலபுராணம்.
திருக்கோயில் அமைப்பு
இந்தக் கோயில், கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் மற்றும் கருங்கல் மதிலுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. இந்தக் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு வலப்புறம், மேல் தளத்துக்குச் செல்வதற்கான படிகள் உள்ளன. மேல் தளத்தை அடைந்தால்... கோபுரத் தளத்துக்கு வந்து விடலாம். கோயிலின் மேல் தளம், செங்கல் மற்றும் சுண்ணாம்பு காரைச் சாந்து கலந்த கட்டுமானமாகத் திகழ்கிறது.
சந்தோமய விமானத்தின் கீழ் பள்ளிகொண்டிருக்கிறார் ஸ்ரீஅரங்கநாத பெருமாள். 'நெடியோன்' எனும் பெயருக்கு ஏற்ப, நெடுமாலாக 15 அடி நீளத்தில் வட திசை பாதம் நீட்டி, தென்திசையில் திருமுடி வைத்து, கிழக்கு நோக்கியவாறு அனந்தனின் மீது பள்ளி கொண்டிருக்கிறார்.
இந்தப் பெருமாளை தரிசனம் செய்தாலே மனமும் ஆன்மாவும் சிலிர்க்கிறது. வேதத்தை பிரமனுக்கு உபதேசித்த பெருமாள் இவர் என்பதால் இந்தப் பெருமாளை வழிபட்டால் ஞானம் பிறக்கும் என்றும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதும் நம்பிக்கை.
இந்தக் கோயில் சந்நிதிகளும் அழகுற அமைந்திருக்கின்றன. ரங்க நாயகி தாயார், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீராமர், வேதாந்த தேசிகர், விஷ்வக்சேனர், ஆண்டாள் ஆகியோரும் இங்கே தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்கு நேர் கிழக்கில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

பெருமாளின் இடப் பக்கம் திருமகளும் பூமகளும் சேவை சாதிக்க, கருட பகவான் பெருமாள் இடும் கட்டளையைச் செய்யத் தயாராகப் பணிவோடு காத்திருக்கும் கோலத்தில் அருள்கிறார். வலது கையால் அபயம் அருளும் பெருமாள், இடது கரத்தால் ஞானமுத்திரை காட்டி நாபிக்கமலத்தில் இருக்கும் நான்முகனுக்கு வேதங்களை உபதேசிக்கிறார்.
இந்த ஆலயத்தை முதலில் தொண்டை நாட்டு மன்னர்கள் திருப்பணி செய்து பராமரித்தனர். பிறகு வேட்டவலம் ஜமீன் அனந்தகிருஷ்ண வாணாதிராஜா ற்பார்வையில் இருந்துள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கோடி கன்னிகாதானம் தாத்தாச்சார்யர் மரபைச் சார்ந்தவர்களிடம் இந்தக் கோயில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டதாம்.
தல புராணம்
இத்தலத்தில் தீர்த்தம் சந்திர புஷ்கரணி. தலவிருட்சம் புன்னை மரம். இந்தத் தல தீர்த்தம் குறித்த புராணத் தகவல் முக்கியமானது.
தன் மனைவியரில் ரோகிணியைத் தவிர மற்றவர்களைப் புறக்கணித்ததால் சந்திஅன் சாபம் பெற்றார். இதனால் கலங்கியவன், தன் சாபம் நீங்க பெருமாளை வேண்டிக்கொள்ள, 'உத்தர ரங்கம்' என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் தவம் இருந்து சந்திர புஷ்கரணியில் நீராடிப் பெருமாளை வ்ழிபட்டால் சாபம் தீரும் என்று வழிகாட்டினார் பெருமாள்.
அதன்படி சந்திரன் இத்தலம் வந்து பெருமாளுக்கு முறையாகப் பூஜை செய்து வழிபட அவனது அழகு திரும்பக் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

எனவே இங்கே பெருமாளை வழிபட்டால் நம் மன நலம் சிறக்கும் என்றும் சந்திரனுக்குரிய பரிகாரத்தலம் இது என்றும் சொல்கிறார்கள்.
மேலும் சந்திரனின் அழகு மீண்ட தலம் என்பதால் இங்கே வருபர்களின் அழகும் பொலிவும் கூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை இந்தத் திருவரங்கத்துக்குச் சென்று பெருமாளை வழிபட்டு வருவாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உங்களைத் தேடிவரும்.