Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம்...
"முதல்வரின் அரசு இல்லத்தில் எத்தனை அறைகள் உள்ளன என்பது கூட என் மகனுக்குத் தெரியாது" - பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது கரிமணல் கம்பெனியில் மாதப்படி வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே லாவலின் வழக்கில் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு மலையாள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயனிடம் மகனுக்கு மத்திய அரசு ஏஜென்சியான அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக எழுந்துள்ள தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "எனது அரசியல் செயல்பாடுகள் கேரளாவில் அனைவருக்கும் தெரியும். அந்த அரசியலில் களங்கம் எதுவும் இல்லை. அதனால்தான் களங்கம் ஏற்படுத்த பலரும் முயலும்போது நான் அமைதியாகச் செயல்படுகிறேன்.

அவை என்னைப் பாதிக்காது. அந்தச் சமயத்தில் உள்ளுக்குள் சிரித்துவிட்டு நிதானமாகக் கடந்துசென்றுவிடுவேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் முதல்வராக உள்ளேன். அதில் பெருமைப்படும் நிறைய விஷயங்கள் எனக்கு உண்டு.
நம் மாநிலத்திலும், நாட்டிலும் நடைபெறும் விஷயங்களும் உங்களுக்குத் தெரியும். நாம் இங்கு திட்டங்கள் செயல்படுத்த ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் கொடுக்கிறோம். வேறு சில இடங்களில் குறிப்பிட்ட சதவீதம் அளிக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை உள்ளது.
அப்படியான ஒரு கணக்கு கேரளத்தில் இல்லை. அதில் நான் பெருமிதம் அடைகிறேன். முழுத்தொகையும் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும்.
ஊழல் சம்பந்தப்பட்ட எதையும் நான் அனுமதிக்கமாட்டேன். அதனால்தான் உயர்மட்ட ஊழல்கள் கேரளாவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதே சமயம் அரசியல் காரணங்களுக்காகச் சில ஏஜென்சிகளைக் கொண்டுவந்து, அவற்றின் மூலம் வேறு விதமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். அது மக்களிடம் செல்லுபடியாகாது.
எனது பொது வாழ்க்கையைக் களங்கம் இல்லாமல் கொண்டுசெல்ல முயல்கிறேன். என் குடும்பமும் அப்படித்தான் செயல்படுகிறது. என் இரண்டு பிள்ளைகளும் அப்படித்தான் உள்ளனர்.
என் மகனை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பதவியில் உள்ள பல முதல்வர்களின் பிள்ளைகளின் செயல்பாடுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் என் மகனுக்கு, முதல்வரின் அரசு வீடான கிளிப் ஹவுசில் எத்தனை அறைகள் உள்ளன என்றுகூட அவனுக்குத் தெரியாது.
என் பிள்ளைகள் எனக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படமாட்டார்கள். அதனால்தான் என் மகளின் விஷயத்தில் சில குற்றச்சாட்டுகள் கூறியபோதும் நான் சிரித்துக்கொண்டே சென்றேன்.

என் மகன் தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார். என் மகன் வேலை, வீடு என இருக்கிறார். தவறான விஷயத்தில் அவன் செல்லவில்லை.
எனக்கு எந்தக் கெட்டப்பெயரும் என் மகன் ஏற்படுத்தவில்லை. அதனால் என் பிள்ளைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். என் ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் எந்த விஷயத்தையும் மகன் செய்யவில்லை.
ஏதோ மத்திய அரசு ஏஜென்சியின் சம்மன் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். சம்மன் எங்கு கொடுத்தார்கள், யாருக்குக் கொடுத்தார்கள், குறிப்பிட்ட பத்திரிகைக்கும் ஏஜென்சிக்கும் என்ன பந்தம் உள்ளது? அப்படி ஒரு சம்மன் எங்களுக்கு வரவில்லை. என் மகனுக்குக் கிடைத்ததாக அவனும் கூறவில்லை" என்றார்.