BB Tamil 9 Day 8: ‘நடிப்பு அரக்கன்’ டாஸ்க்; கனி அக்காவிற்கு ஸ்கெட்ச் போடும் பாரு...
திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!
ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை!
கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். பாலத்திற்கு அறிவியலாளர் ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டப்போகிறோம் எனக் கூறியவுடனேயே கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டது.

ஏனெனில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென இதே அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. சாதிகளின் பெயரை களையச் சொன்னவர்களே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் எனப் பெயரிட்டதுதான் பிரச்னை. இந்த விவகாரத்தில் அரசை எதிர்க்கும் முற்போக்காளர்களின் வாதத்தில் வலுவான நியாயம் இருப்பதை அறிய முடிகிறது.
பெயர்களுக்கு பின்னால் சாதிய ஒட்டை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது தமிழகத்தின் பெருமை. இன்றைக்கு தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலானோர் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதியை போட்டுக் கொள்வதில்லை. உள்ளே சாதிய வெறி ஊறிப் போயிருப்பவர்கள் கூட தங்களின் பெயருக்குப் பின்னால் வெளிப்படையாக சாதியின் பெயரைப் போட்டுக் கொள்ள வெட்கப்படுவார்கள். இந்த நிலையை எட்ட தமிழகம் சமூகரீதியாக நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.

பெரியாரின் சுயமரியாதை மாநாடு!
அயோத்திதாச பண்டிதர் தொடங்கி பெரியார் தொட்டு பலரும் சாதிய ஒழிப்புக்காகவும் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காகவும் அத்தனை உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். 1929 இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதியை துறந்தனர்.

'மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்றபட்டு ஒரே லட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங்களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.' என அந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பற்றி குடி அரசு இதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது.
தேர்தல் அரசியலில் திராவிட இயக்கங்களின் வெற்றி இந்தக் கருத்துகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது. சாதியற்ற சமூகமாக ஒன்று திரள்வதற்கும் சாதியின் பெயரால் இழிவுப்படுத்தப்பட்ட மக்களின் மீட்சியிலும், சாதிப் பெயர்களை நீக்கிய இந்த நகர்வுக்கு பெரிய பங்கிருக்கிறது.
பிற்போக்கு வாதம்!
ஜி.டி.நாயுடு விவகாரத்தில் அவர் அப்படித்தானே காலம் காலமாக அறியப்படுகிறார். அவரை அப்படியே அழைப்போமே என்பதுதான் ஆளும் அரசுக்கு ஆதரவாக நிற்பவர்களின் கருத்தாக இருக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட இதேபோன்ற கருத்தைத்தான் கூறியிருக்கிறார். 'ஜி.டி.நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பெயர்கள் இருக்கிறது என்று சொன்னால், தங்களுடைய கையொப்பங்களையும் அப்படித்தான் போடுவார்கள். அவர்கள் அப்படியே அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதை நீக்கி, துரைசாமி பாலம் என்றால், எந்தத் துரைசாமி என்று யாருக்கும் தெரியாது. கோயம்புத்தூரிலேயே துரைசாமி என்றால் தெரியாது. இன்னுங்கேட்டால், அவருடைய பேரப் பிள்ளைகளுக்கே துரைசாமி யார் என்று கேட்டால், தெரியாது என்றுதான் சொல்வார்கள்.ஜி.டி.நாயுடு என்று சொல்லும்போது, அவரை நாயுடுவாக யாரும் பார்க்கவில்லை; விஞ்ஞானியாகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.' என்கிறார் கி.வீரமணி.

கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூறியிருக்கிறார். 'பாலத்தை ஜி.டி.பாலம் என்றா கூறமுடியும்?' என தங்கம் தென்னரசு கேள்வி கேட்டிருக்கிறார்.

பெரியாரின் திராவிடர் கழகத்தையும் பெரியாரின் வழி வந்த திமுகவையும் சேர்ந்தவர்கள் இப்படி பேசுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிடுங்கள். காலங்காலமாக எப்படி அடையாளப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்குள் பெரிதாக ஆராய்ச்சியெல்லாம் வேண்டாமென்பது முழுக்க முழுக்க வலதுசாரி சிந்தாந்தமே. காலங்காலமாக ஒருவிதமாக அடையாளப்பட்டவை அப்படியே இருக்கட்டும் என திராவிட இயக்கங்கள் விட்டிருந்தால், இன்றைக்கு தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழாமலேயே போயிருக்கும்.
திராவிட இயக்கங்கள் சமூகத்தை முன்னோக்கித்தள்ள விளிம்புநிலை மக்கள் மீதான இழிசொற்களை எப்போதுமே மாற்றி மாற்றி மேம்படுத்தவே செய்திருக்கிறது. சமீபத்தில் கூட தீண்டாமையின் குறியீடாக நின்ற 'காலனி' என்கிற பெயரை இதே திமுக அரசு நீக்குவதாக கூறியதே? காலங்காலமாக காலனி என அறியப்பட்டது அப்படியே இருக்கட்டும் என நம்மால் விட முடியுமா? அப்படி செய்தால் அது சமூக நீதியாக இருக்குமா?
விதவைகள் - கைம்பெண்கள்,
ஊனமுற்றோர் - மாற்றுத்திறனாளிகள்,
துப்புரவுப் பணியாளர் - தூய்மைப் பணியாளர்
இவ்வளவு ஏன், மிக சமீபத்தில் நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என்று தான் அழைக்க வேண்டும் என எப்போதுமே பெயர்களுக்கு பின்னுள்ள கண்ணியக் குறைவையும் இழிவையும் நீக்கவதில் தமிழகம் முன்னோக்கியே செயல்பட்டிருக்கிறது.

இப்போதும் கூட அந்தவிதத்தில் தெருக்கள் மற்றும் பொது இடங்களிலுள்ள சாதிய பெயர்களை நீக்க வேண்டுமென்பதை முழுமையாக வரவேற்க வேண்டும். ஆனால், அதற்கு இந்த அரசாங்கம் முதலில் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். சாதியப் பெயர்களை நீக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டுவிட்டு, இரண்டே நாட்களில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் என சாதியப் பெயரோடு ஒரு பெயர் சூட்டல் நிகழ்வை நடத்துவது தவறான முன்னுதாரணமாகவே மாறி நிற்கும்.
சாதிய இழிவு!
ஒரு தலித் சாதியின் பெயரை தாங்கிய ஒருவரின் பெயரை இப்படி எதற்காவது சூட்ட முடியுமா? ஏனெனில், காலங்காலமாகவே அந்தப் பெயர்களின் வழி அந்த மக்கள் பெரும் இன்னல்களுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு இழிவுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாற்று சாதியினரால் தங்களின் பெயருக்குப் பின்னால் எந்த தயக்கமுமின்றி தங்களின் சாதிப் பெயரை போட்டுக் கொள்ள முடியும். அதை ஒரு பெருமிதமாகவும் அவர்களால் நினைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், தலித்துகளால் அப்படி தங்களின் சாதிப் பெயரை தங்களுக்கு பின்னொட்டாக சேர்த்துக் கொள்ள முடியாது. அதன் பொருட்டே அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள், ஒடுக்கப்படுவார்கள்.

சாதியே இங்கே இழிவுதான்
இந்த நிலை மாற வேண்டுமெனில், தலித் சாதிகளின் பெயர் தாங்கி நிற்கும் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயரை மட்டுமே நீக்கினால் போதுமா? எனில் அவை மட்டும்தான் இங்கே இழிவா? சாதியே இங்கே இழிவுதான். எந்த சாதியின் பெயரையும், சாதியின் பெயரை தாங்கி நிற்கும் யாரையும் இதற்கு விதிவிலக்காக பார்க்க முடியாது. ஜி.டி.நாயுடு உட்பட!

'பாலத்திற்கு ஜி.டி பாலம் என்றா பெயர் வைக்க முடியும்?' என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்கிறார். அவர்களின் குடும்பத்தினரே அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஜி.டி என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். சாதியின் பெயரை அவர்களே சேர்த்துக் கொள்ளவில்லை அமைச்சரே!
ஜி.டி என்று வைக்க முடியாவிட்டால், துரைசாமி என்கிற அவரின் பெயரை கூட பயன்படுத்தலாமே. ஜி.டி.நாயுடுவை துரைசாமி என நீங்கள் புதிதாக அடையாளப்படுத்தலாமே! நீங்கள் சொல்வதைப் போலவே அவரின் சாதிக்காக அவரை யாரும் நினைவுக்கூறுவதில்லையே. அவரின் கண்டுபிடிப்புகளுக்காகத்தானே இத்தனை காலமாக நினைவுகூறப்படுகிறார். எனில், அவரை துரைசாமி என்றே அடையாளப்படுத்த இந்த திராவிட மாடல் அரசுக்கு என்ன பிரச்னை?