Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்...
காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!
இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளித்தரும் தாயாரின் சந்நிதி அமைந்திருக்கும் திருத்தலம்தான் சௌந்தர்யபுரம்.
காஞ்சியில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது, இந்த அற்புதத் தலம். எம்பெருமான் ஆதிகேசவன் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில் தாயார் சௌந்தர்யக் கோலத்தில் அம்புஜவல்லி என்கிற திருநாமத்தோடும் அருள்பாலிக்கின்றனர்.

ஆதிகேசவப் பெருமாளின் தரிசனமே ஒருவரின் மனக்குறையைப் போக்கிவிடும். அந்த அளவுக்கு அற்புதமான மூர்த்தியாகத் திகழ்கிறார் மூலவர். அவர் சந்நிதியில் சாந்நித்தியம் நிறைந்திருப்பதை நம்மால் உணரமுடியும்.
இந்தத் திருக்கோயில் சுமார் 500 வருடங்களுக்குமுன் ஸ்ரீஅகோபில மடத்தின் ஆறாம் பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஷஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் நான்குவித புருஷார்த்தங்களை அளிக்கும் வகையில் இங்கே பெருமாளையும் தாயாரையும் இங்கே பிரதிஷ்டை செய்தார் அந்த மகான்.
தாயார் திருக்கோலம்
தாயார் இங்கே, தபோ கோலத்தில் முதிர்ந்த ஞானத்துடன் பக்தர்களை அனுக்கிரஹிக்கும் பார்வையுடன், ஸ்ரீபத்ம சக்ரத்துடன் அருளாட்சி செய்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீராஜலக்ஷ்மி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள்.
ஒருமுறை இந்தத் தலத்துக்கு வந்து இந்தத் தாயாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டால், அந்தத் தாய் நம்முடனேயே நம் இல்லத்துக்கு வந்து அங்கே லக்ஷ்மி கடாட்சம் பெருகச் செய்வாள் என்பது நம்பிக்கை.
இங்குள்ள ஆண்டாள் சந்நிதி அற்புதமானது. பெரியாழ்வார் வளர்த்த இளம் கோதையாய் இங்கே ஆண்டாள் நாச்சியார் அருள்பாலிக்கிறார்.
மேற்கு நோக்கிய பெருமாளை சேவித்தவாறு நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் கருடாழ்வார். ஸ்ரீநிகமாந்த தேசிகனின் கருட தண்டகத்தைப் பாராயணம் செய்து இவரைத் தரிசித்து வழிபட, விஷப்பூச்சிகளின் தொல்லைகள் விலகும் என்கிறார்கள்.

அதேபோல், இங்குள்ள பெருமாளை மீட்ட ஸ்ரீசுந்தரவரத ஆஞ்சநேயரும் வரப்பிரசாதி ஆனவர். 2012 - ம் ஆண்டுவாக்கில் இங்குள்ள பெருமாள் உட்பட உற்ஸவ விக்கிரகங்கள் திருடுபோய்விட்டனவாம். இந்த அனுமனை ஆலயத்தில் எழுந்தருளச் செய்த இரண்டு நாள்களில், தெய்வச் சிலைகள் மீண்டும் கிடைத்தனவாம்.
எனவே, இவரை மனதில் நினைத்து வழிபட்டாலே பல வித நன்மைகளும் கூடிவரும். மேலும் இழந்த பணம், புகழ், செல்வாக்கு அனைத்தும் தேடிவரும் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே பிராகாரத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு இரண்டு நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நடுவே அழகிய கண்ணனையும் சேவிக்கலாம். இந்த நாகங்களுக்கு அவரவர் கரங்களினாலே, அபிஷேகம் செய்து வழிபட ராகு கேதுவினால் உண்டாகும் தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
ஸ்ரீபத்ம சக்கரம்
பொதுவாக பெருமாள் சக்ரதாரியாகக் காட்சி கொடுப்பார். இங்கே தாயாரும் சக்ரரூபியாகக் காட்சி அருள்கிறார். இத்திருக்கோலம் மிகவும் அபூர்வமானது.
மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஓர் கர்ணிகையும், அதை ஒட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைர்ய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகியோர் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜவல்லீயுடன் சேர்ந்து நவசக்தியாக அருள்பாலிக்கின்றனர்.
நான்கு வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் நான்கு தீ ஜ்வாலைகளையும், அந்த ஜ்வாலைகளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீவராஹர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது.

இந்த சக்கரம் ஸ்ரீமஹாலட்சுமியின் அம்சம். எனவே தாயாரிடம் நாம் கேட்க விரும்பும் அனைத்தையும் இந்தச் சக்கரத்திடம் வேண்டிக்கொண்டால் விரைவில் நம் தேவைகள் நிறைவேறும் என்கிறார்கள்.
குறிப்பாக செல்வ வளம் சேர்ந்து கடன் தொல்லைகள் அகலும். நினைத்த காரியங்கள் கைகூடும். திருமண தடைகள் முற்றிலும் விலகி நல்ல வரன் அமையும். குழந்தைச் செல்வம் வேண்டியவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
தன தான்ய அபிவிருத்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி பல மடங்கு முன்னேற்றம் ஏற்படும். பயம் விலகும். கல்வியில் சிறந்துவிளங்குவார்கள்.
இப்படி பத்ம சக்கரத்தை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் பலப்பல என்கிறார்கள் பக்தர்கள். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினங்களில் ஸ்ரீபத்ம சக்கரத்துக்கு பாலபிஷேகம் நடைபெறும். கூடவே வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டு, நம் வாழ்வில் வளம் பெருக வரம் பெற்று வருவோம்.