"DUDE படத்தை தள்ளி வைக்கச் சொன்னோம்; 'LIK' தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை" - LIK படக்க...
கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறைவேற்றி தருவதாக கூறி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், பெரியார் தெருவைச் சேர்ந்த பிரவீனா (வயது: 26) என்பவர் திருமணமாகாமல் தனது தாயாருடன் வசித்து வருகிறார். பிரவீனாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்திருக்கிறது.

பல மருத்துவமனைகளில் சென்றும் பார்த்த போதும் எந்த பயனும் இல்லாத காரணத்தினால் பிரவீனாவிற்கு குளித்தலையில் உள்ள சக்திவேல் சாமியாரிடம் சென்றால் சரியாகிவிடும் என்று பலர் சொல்வதைக் கேட்டு, பிரவீனா மற்றும் அவரது தாயார் செல்வராணி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த பொழுது பிரவீனாருக்கு பேய் பிடித்ததுள்ளதாகவும், பிரவீனா வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை சரி செய்வது தருவதாகவும் கூறி ரூபாய் 10 லட்சம் கேட்டுள்ளார். மேலும், அவர் சம்மதம் தெரிவித்து இந்த 2024 டிசம்பர் மாதத்தில் இருந்து கோயிலுக்கு வந்து சென்றுள்ளார். அதோடு, சுமார் பத்து முறை பணம் ஜிபே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.5,50,000 கொடுத்துள்ளார். அதன் பிறகு சக்திவேல் மூன்று முறை சென்று வீட்டில் மாந்திரீகம் செய்வதாகவும், அதன் பின்னர் சரி ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், பிரவீனாவிற்கு உடல்நிலை சரியாகாததால் தனியார் மருத்துவமனை சென்று உடல்நிலையை சரி செய்து கொண்டார். அதன் பின்னர், பிரவீனா தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சக்திவேல் தகாத வார்த்தையில் திட்டியும், கையால் அடித்தும், `உங்களை கருப்புசாமிக்கு வெட்டி பலிக்கடா ஆக்கி கொன்று விடுவேன்' என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பிரவீனா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் சக்திவேலை கைது செய்து, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணிடம் போலி சாமியார் ஒருவர் பணம் பெற்று மோசடி செய்து கைதான சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.