கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போ...
அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கொலை -கந்துவட்டி தொழில் செய்த பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் பா.ஜ.க-வின் ஒன்றிய செயலாளர். கந்துவட்டி தொழில் செய்து வந்த இவரிடம் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சக்திவேல் வட்டியுடன் கடனை சரியாக திருப்பி தரவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் ராஜேஷ்குமார் கடனை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்துள்ளார். இதனால் சக்திவேல் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி, ராஜேஷ்குமார், சக்திவேல் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சக்திவேல் வீட்டில் இல்லை. அவரது தம்பி பிரகதீஷ் இருந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி தரவில்லை என்றால் புல்டோசர் வைத்து வீட்டை இடித்து தள்ளிடுவேன் என ராஜேஷ்குமார் மிரட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமார், பிரகதீஷை வெட்டி சாய்க்க சம்பவ இடத்திலேயே பிரகதீஷ் உயிரிழந்தார். அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரின் வீட்டை சோதனை செய்ததில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்ததில் 29 டூவீலர், 3 நான்கு சக்கர வாகனம் மற்றும் 75 ஆவணங்கள் ஆகியவற்றை பணம் பெற்றவர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இதன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் போலீஸார் சிறையில் அடைத்தனர்.