IAS, IPS தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மத்திய அரசு பணிகள் என்னென்ன?
Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்?
Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் உபயோகிப்பதற்கும் நெபுலைசர் உபயோகிப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டையுமே உபயோகிக்கலாமா, எது வேகமான நிவாரணம் தரும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் திருப்பதி

ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அழற்சி' பாதிப்பு போன்றவை உள்ளோருக்கு இன்ஹேலர் பரிந்துரைப்பது வழக்கம். இன்ஹேலர் என்பது மருந்தை, கேஸ் வடிவில் நோயாளிக்குக் கொடுப்பது.
இன்ஹேலர் என்பதை மூன்று வடிவங்களில் கொடுக்கலாம். 'டிரை பவுடர் இன்ஹேலர்' என்பதில் கேப்ஸ்யூல் இருக்கும். அதை இன்ஹேலர் கருவியில் போட்டுச் சுழற்றினால், அந்த கேப்ஸ்யூல் உடைந்துவிடும். அதை சம்பந்தப்பட்ட நோயாளி, வேகமாக இழுக்க வேண்டும்.
அடுத்தது 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' (metered dose inhaler) எனப்படும். இதிலும் கேஸ் வடிவில்தான் மருந்து உள் செலுத்தப்படும். பஃப் என்றும் சொல்வோம். பொதுவாக, இதையே இன்ஹேலர் என்று நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
மூன்றாவது, நெபுலைஸர் ( Nebulizer). இதில் திரவ வடிவில் உள்ள மருந்தை உள்ளே விட வேண்டும். திரவ மருந்தானது கேஸ் வடிவ துகள்களாக மாறி உள்ளிழுக்க வசதியாக இருக்கும்.

ஆக, இந்த மூன்றிலுமே மருந்தை கேஸ் வடிவில்தான் கொடுக்கிறோம். கொடுக்கும் விதம் மட்டுமே வேறுபடும். யாருக்கு, எது சரியானது என்பது பல காரணிகளை வைத்துத் தீர்மானிக்கப்படும்.
அதாவது நோயாளியின் வயது, இன்ஹேலர் பயன்படுத்துவதை அவர் புரிந்துகொள்ளும் தன்மை, வேகமாக காற்றை உள்ளிழுக்கும் திறன், அழுத்தும்போது கேஸை சரியாக உள்ளிழுக்க வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் மருந்து வீணாகிவிடும். 'பல மாசமா இன்ஹேலர் யூஸ் பண்றோம்... பிரச்னை சரியாகலை' என்று சொல்லும் பலரைப் பார்க்கலாம். காரணம், அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தாததுதான்.
முதலில் குறிப்பிட்ட பவுடர் வடிவ இன்ஹேலரை பயன்படுத்துவதில் அதை வேகமாக உள்ளிழுப்பது மட்டும்தான் சவால். அந்தத் திறன் உள்ளவர்களுக்கு டிரை பவுடர் இன்ஹேலர்தான் பெஸ்ட்.
அது சூழலுக்கும் உகந்தது. 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பயன்படுத்தும்போது 'க்ளுரோஃப்ளுரோ கார்பன்' (Chlorofluorocarbons) என்ற நச்சுப் பொருளும் வெளியாவதால், அது சூழலுக்கு ஏற்றதல்ல.
வயதானவர்களால் டிரை பவுடர் இன்ஹேலரை சரியாகப் பயன்படுத்த முடியாது. முழுமையாக உள்ளிழுக்க மாட்டார்கள். அதனால் மருந்தானது வாய்க்கும் தொண்டைக்கும் தான் போகுமே தவிர, நுரையீரல் வரை போகாது.
அவர்களுக்கு, அதிக மெனக்கெடல் இருக்கக்கூடாது, அதே சமயத்தில் மருந்தும் முழுமையாக உள்ளே போக வேண்டும் என்பதால் 'மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' பரிந்துரைப்போம். அதை அழுத்தும்போது சரியாக உள்ளிழுக்காவிட்டால் மருந்தெல்லாம் வெளியேறிவிடும்.
இதைப் பயன்படுத்தும்போது சரியாக அழுத்தி, சரியாக உள்ளிழுத்து, 10 நொடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, பிறகு மூச்சை விட வேண்டும்.
இது பிடிபடாமல்தான் பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தச் சிக்கலை எதிர்கொள்ள ஸ்பேஸர் பயன்படுத்தலாம்.

முதல் இரண்டு வகை இன்ஹேலர்களையும் பயன்படுத்த முடியாத நிலையிலோ, எமர்ஜென்சியிலோ, தீவிர மூச்சுத்திணறலுக்கு நெபுலைஸர் பயன்படுத்துவோம்.
இதிலும் மைனஸ் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட நேரம் இதைப் பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது சிறிதளவு மருந்து வீணாகும்.
இந்தக் கருவியைச் சுமந்துகொண்டு செல்வதும் சிரமம். எல்லா மருந்துகளையும் இதில் பயன்படுத்த முடிவதில்லை. பராமரிப்பும் முக்கியம்.
நெபுலைஸர் பயன்படுத்தும்போது மாஸ்க் உள்ளிட்ட இணைப்புகளை முறையாகச் சுத்தம் செய்தே மறுபடி பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் பயன்படுத்திய மாஸ்க்கை இன்னொருவர் பயன்படுத்தக்கூடாது. நெபுலைஸர் பயன்படுத்தி முடித்ததும் வாய்க் கொப்புளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த மருந்து தொண்டையில் வெள்ளையாகப் படிந்து பிரச்னையைத் தரும். எதைப் பயன்படுத்தினாலும் மருந்தின் அளவு, நோயாளியின் வயது, நோயின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து, மருத்துவரின் அறிவுரையோடுதான் பயன்படுத்த வேண்டும்.
இன்ஹேலரின் முழுமையான பலன் என்பது அதை எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் உள்ளது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.