சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கா...
கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில்: உப்பில்லா நிவேதனங்கள்; சரணாகதி அருளும் தென் திருப்பதி பெருமாள்!
திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. ஆனால் சூழ்நிலை காரணமாக எல்லோராலும் ஒவ்வோர் ஆண்டும் பயணப்பட முடிவதில்லை.
எனவேதான் பெரியோர்கள் திவ்ய தேசங்களில் சிலவற்றை திருப்பதிக்கு நிகரான தலங்களாகக் கண்டு சொல்லி அங்கேயே திருப்பதி பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம் என்று பரிந்துரைத்தார்கள். அப்படி அவர்கள் பரிந்துரைத்த அற்புதத்தலங்களில் ஒன்று கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில்.
கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். ராகு தலமான திருநாகேஸ்வரக்கு மிக அருகில் உள்ளது இக்கோயில். இங்கு திருமால், உ(ஒ)ப்பிலியப்பனாக, பூமிதேவி தாயாருடன் தரிசனம் தருகிறார்.

மார்க்கண்டேய மகரிஷி தவமிருந்து தனக்கு தேவியரில் ஒருவரே மகளாக வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். அதன் பலனாக, மார்க்கண்டேயரின் இல்லத்தில், துளசி மாடத்தின் கீழ் அவதரித்தாள் பூமாதேவி.
தேவியே தனக்கு மகளானாள் என்பதை உணர்ந்துகொண்ட மார்க்கண்டேய மகரிஷி அவளை அன்போடு வளர்த்துவந்தாள். அவளுக்குத் திருமண வயதும் நெருங்கியது.
பெருமாள் ஒரு முதியவர் ரூபத்தில் முனிவரை வந்து சந்தித்தார். 'உம் மகளை எனக்குத் திருமணம் செய்துகொடு' என்று கேட்டார். இதைக்கேட்ட மகரிஷி அதிர்ந்தார். வந்திருப்பது பெருமாள் என்பதை அவர் உணரவில்லை என்றாலும் முதியவர் மனம் கோணாமல் பதில் சொல்ல நினைத்தார்.
“ஐயா, என் மகள் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்கு சுவை அறிந்து சமைக்கத் தெரியாது. ஏன் சமைத்த உணவில் சரியாக உப்புப் போடக்கூடத் தெரியாது. அதனால், தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்றார். ஆனால், முதியவரோ அது ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லி வற்புறுத்தினார்.
இதைக் கண்டு செய்வதறியாது தவித்த மார்க்கண்டேயர், எம்பெருமானை நினைத்து மனம் உருகி, கண்மூடி வேண்டினார். அப்போது அவர் முன் முதியவராய் நின்ற பெருமாள் தன் திருக்கோலத்தோடு வெளிப்பட்டார். மார்க்கண்டேயர் மகிழ்ச்சியில் திளைத்தார். திருமாலுக்குத் தன் மகளை மணமுடித்துத் தரவும் ஒப்புக் கொண்டார்.
அப்போது திருமால் மகரிஷியிடம் ஒரு புன்னகையோடு, “மார்க்கண்டேயரே... இந்தத் திருவிளையாடலின் நினைவாக இனி இத்தலத்தில் எனக்கு உப்பில்லாத நிவேதனமே நடக்கட்டும்" என்று கூறியருளினார்.

அதனாலேயே இன்றளவும், இங்கு அருள்பாலிக்கும் திருமாலுக்கு உப்பில்லாத பண்டங்கள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே திருமாலுக்கு இங்கே ‘உப்பிலியப்பன்’ என்னும் திருநாமம் அமைந்தது.
ஆனால் யாராலும் நிகர் சொல்ல முடியாத பெருமாள் என்பதால், 'ஒப்பிலாத அப்பன்' என்று திருநாமம் ஏற்பட்டு அதுவே உப்பிலியப்பன் என்றானது என்றும் சொல்வார்கள்.
இங்கு எழுந்தருளியுள்ள உப்பிலியப்பர், கிழக்குத் திசை நோக்கி நின்ற கோலத்தில் பூமாதேவி வடதிசை நோக்கி அமர்ந்த நிலையிலும் இருக்க, அவருக்கு எதிராக மார்க்கண்டேயர் தென் திசை நோக்கி அமர்ந்து கன்யாதானம் செய்து தருவது போன்ற நிலையில் காட்சி தருகிறார்.
மார்க்கண்டேய மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால் இதற்கு மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. தாயார் துளசிச் செடியின் கீழ் அவதரித்ததால் ‘துளசி வனம்’ என்றும் கூறுவதுண்டு.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கை யாழ்வார், பேயாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் இது.
இங்கு அருள்பாலிக்கும் உப்பிலியப்பர், திருப்பதி ஏழுமலையானைக் காட்டிலும் பெருமை வாய்ந்தவராகவும், மூத்தவராகவும் கருதப்படுகிறார். திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள், அவருக்கு நேர்ந்துகொண்ட காணிக்கைகளையோ, பிரார்த்தனைகளையோ இங்கே உப்பிலியப்பருக்கு நிறைவேற்றலாம் என்பார்கள்.

பிரார்த்தனை சிறப்புகள்
சந்தனம், குங்குமம் ஆகியவற்றை ஒப்பிலியப்பனுக்குச் சமர்ப்பித்தால், பிரமஹத்தி தோஷத்திலிருந்து விடுபடலாம். தீபக்கால், தூபக்கால், திருமஞ்சனப் பாத்திரம் மற்றும் வெங்கல மணி ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் பாபவிமோசனம் கிடைக்கும்.
கருடன் சந்நிதிக்கு முன் அமைந்துள்ள பெருமாள் திருவடிகளில் மிளகு கலந்த உப்பைக் கொட்டி வழிபட்டால் சரும நோய்கள் விலகுவதாக நம்பிக்கை. எதிரி பயம் நீங்கவும், அசுவமேத யாகம் செய்த பலனை அடையவும் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்யலாம்.
ஒப்பிலியப்பனுக்கு உற்சவம் நடத்தினால், புத்திரப் பாக்கியம் திண்ணம் என்பது ஐதீகம்.
இங்கு எம்பெருமானை துளசியால் பூஜிப்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
விழாக்களும் விசேஷங்களும்...
இங்கு திருக்கல்யாண உத்ஸவம், கருட சேவை, தங்கரதம், திருமஞ்சனம், உத்ஸவர் திருமஞ்சனம் முதலியவை சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாத திருவோணத்தின் போதுதான் எம்பெருமான் தேவியைத் திருமணம் செய்துகொண்டார். எனவே, ஐப்பசி மாத திருவோணத்தின்போது, 12 நாள்கள் கொடியேற்றத்தோடு விழா நடைபெறும்.
பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை ஒப்பிலியப்பனைச் சென்று தரிசனம் செய்துவாருங்கள். வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படும் இந்தப் பெருமாளின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும்.