செங்கல்பட்டு அருகே ஔஷதகிரி: மலைமேல் தாயார் வடிவில் பெருமாள் - கல்யாண வரம் தரும் அபூர்வ தலம்
பெருமாள் பல்வேறு திருக்கோலங்களில் தேசமெங்கும் கோயில்கொண்டு அருள்கிறார். அப்படி அவர் அருளும் ஒவ்வொரு தலமும் ஒரு தனிச்சிறப்பு பெற்றது. அப்படி ஓர் ஆலயம் தான் சென்னை - தாம்பரம் வழித்தடத்தில் மறைமலை நகருக்கு அருகில் ஆப்பூர் கிராமத்தில் இருக்கும் மலைத்தலம் தான் ஔஷதகிரி.
மறைமலைநகரில் இருந்து, சாமியார் கேட் எனப்படும் ரயில்வே கேட் வழியே சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால், அழகிய ஆம்பூர் கிராமத்தை அடையலாம். இங்குதான், 500 படிகள் கொண்ட ஒளஷதமலையும் அதன் மேலே அழகிய பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது.

ஔஷதம் என்றால் மருந்து என்று பொருள். இந்த மலை நிறைய மூலிகைகள் நிறைந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உண்டானது என்கிறார்கள். மலை ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஏறிச்செல்லும்போதே நம்மைத் தழுவும் காற்றில் மூலிகைகளின் வாசனையும் கலந்திருப்பதால் மலையேறும் சோர்வை நாம் அனுபவிக்கவே மாட்டோம். மேலும் பலரும் அறியாத தலம் என்பதால் இங்கு கூட்டம் என்பதும் இருக்காது. ஏகாந்தமாகப் பெருமாளை அனுபவிக்க உகந்த தலம் இது.
அழகான இந்தக் குன்றின் மீது அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள். இந்த ஆலயம் இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட பெருமையை உடையது.
புராண காலத்தில் அறுபத்து மூன்று ரிஷிகள் இங்கே பெருமாளை நோக்கிக் கடும் தவம் செய்தனர். அவர்களுக்குப் பெருமாள் காட்சி கொடுத்து அருள்பாலித்த தலம் இது. மேலும் அகத்திய முனிவர் தவம் செய்த வைணவத் தலமும் இதுவே என்னும் பெருமையும் இதற்கு உண்டு.
கோயிலினுள்ளே, அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீநித்தியகல்யாண பிரசன்ன வேங்கடேசபெருமாள். சங்கு- சக்கரம்தாரியாக நின்றகோலத்தில் அருட்த்திருக்கோலம் அருள்கிறார் பெருமாள்.

பெருமாள் எப்போதும் மகாலட்சுமியைத் தன் மார்பில் சுமந்திருப்பார். இந்தத் தலத்தில் கூடுதலாகத் தானே மகாலட்சுமி சொருபமாகவும் அருள்பாலிக்கிறார். இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் தாயாரின் பரிபூரண அருளைப் பெறுவார்கள் என்பது ஐதிகம். எனவே இங்கே பெருமாளுக்கு வஸ்திரமாக வேஷ்டி சாத்துவதில்லை. மாறாகப் புடவையையே சாத்துக்கிறார்கள். பெருமாள் புடவையில் கம்பீரமாகவும் அதேவேளையில் தாயாரின் கருணையோடும் அருள்பாலிக்கிறார். இது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.
எப்போதும் தாயாரோடு இணைந்த மூர்த்தியாக பெருமாள் விளங்குவதால் இங்கே வந்து பெருமாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. பலருக்கும் ஜாதகத்தில் திருமண யோகத்தைத் தடைசெய்யும் தோஷங்கள் இருக்கும். அவற்றை நீக்கி அருள்கிறார் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள். மேலும் இவரை வணங்கினால் வியாபாரம் செழிக்கும். பொருளாதாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
மலையின் மேல், ஸ்ரீலட்சுமி பாதம் அமைந்துள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீநித்திய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாளையும் ஸ்ரீமகாலட்சுமியின் திருப்பாதத்தையும் வணங்கி வழிபட... சகல ஐஸ்வரியங்களும் பெருகும் எனகிறார்கள் பக்தர்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தப் பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷம். எனவே அவரை தரிசனம் செய்ய சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் வருவார்கள். கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். மற்ற நாள்களில் மிகவும் குறைவான பக்தர்களையே இங்கே காணமுடியும். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை ஔஷத கிரிமேல் அருளும் நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்வில் பெருமாளின் அருள் கூட இருந்து வழிநடத்தும்.
கோயில், காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரையும் திறந்திருக்கும். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களில், இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். அந்த நாள்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். சென்னை- சிங்க பெருமாள்கோவிலில் இருந்து ஆம்பூருக்கு பஸ் வசதி உண்டு.