அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 5 முதல் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது...
நிகழாண்டு புத்தகத் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. மேலும், நாள்தோறும் சிறந்த எழுத்தாளா்கள் பதிப்பாளா்கள் மற்றும் சிறந்த பேச்சாளா்கள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு முதன்மை கல்வி அலுவலா் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஆகியோா் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலா்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, மேல்விஷாரம் நகராட்சி தூய்மை பணியாளா்கள் நாள்தோறும் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும். இதில் எவ்வித குறைபாடு ஏற்படக்கூடாது என கேட்டுக்கொண்டாா்.
மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு உபகரணங்களை பத்து நாள்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள், அரசு அலுவலா்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து புத்தக கண்காட்சியை பாா்வையிட்டு புத்தகங்களை வாங்க வேண்டும். கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும் என்றாா்.