``அவளை முழுசா நம்பினால் மட்டும் போதும்; பிரச்னைகளைத் தீர்ப்பாள் முத்தாரம்மன்'' - நெகிழும் பக்தர்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
”நவராத்திரி” என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குலசை தசரா திருவிழாதான் சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பல ஊர்களிலுள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாள்கள் விரதமிருந்தும் பல்வேறு வேடமணிந்தும் தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் முழுவதிலுள்ள தசரா 10ம் நாள் திருவிழாவான மகிஷாசூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண, குலசைக்குப் படையெடுப்பார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம்.
இத்திருக்கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.
சுயம்புவாகத் தோன்றிய லிங்கம்
இத்திருக்கோயில் உருவான வரலாறு குறித்து அர்ச்சகர்களிடம் பேசினோம், “பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் ’குலசேகரன்பட்டினம்’ என அழைக்கப்பட்டது.
மக்களுக்கு முத்து போட்டதை ஆற்றி (இறக்கி) எடுத்து காப்பாற்றியதால் முத்து ஆற்று அம்மன் என்றாகி, இத்தல அம்பிகைக்கு ’முத்தாரம்மன்’எனப் பெயர் வந்தது. ’மூர்த்தம்’ என்ற சொல்லுக்கு ‘உருவம்’ என்று பொருள். ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர்தான் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர். ’ஞானம்’ என்றால் பேரறிவு.

’மூர்த்தம்’ என்றால் வடிவம், ‘மூர்த்தி’ வடிவானவர். ‘ஈஸ்வரர்’ என்ற சொல்லுக்கு ’ஈகை சுரப்பவர்’ என்பது பொருள். சித்தாந்தத்தில் சரியை, கிரியை, யோகம் ஆகியன தவம் எனப்படுகிறது.
தவம் முற்றிய உயிர்களுக்கு ஞானாசிரியனிடம் தங்கியிருந்து பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி ஆனார். இங்கு அம்மை முத்தாரம்மனுடன் அப்பன் ஞானமூர்த்தீஸ்வரரும் ஒருசேர ஒரே பீடத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
முற்காலத்தில் தானாக சுயம்புவாக லிங்கத் திருமேனியில் வெளிப்பட்டது. முதலில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் போன்ற உருவம் உள்ளது.
அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்பாள்
பிற்காலத்தில் அம்பாளுக்கு சிறப்புச் செய்ய நினைத்த பக்தர்கள் சிலை அமைத்து கோயில் எழுப்ப நினைத்தனர்.
அந்த நேரத்தில் கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்பாள், ‘’மகனே எனது உருவத்தை சிலை வடிக்க வேண்டுமென்றால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி என்ற ஊருக்குச் செல்’’ எனக்கூறி மறைந்தாள். அதே போல மயிலாடி கிராமத்திலுள்ள சுப்பையா ஆசாரி என்பவரது கனவில் தோன்றிய அம்பாள், ‘’மகனே.. எங்கள் வடிவத்தை உற்று நோக்கு.

இவ்வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்துக்கொடு. இக்கல் தென்திசையிலுள்ள ஆண் பெண் பாறையில் உள்ளது. குலசையிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அவர்களிடம் இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்தெடுத்த சிலையைக் கொடுத்தனுப்பு’’ என்று கூறி மறைந்தாள்.
அதன்படியே கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடிக்குச் சென்று சிற்பி சுப்பையா ஆசாரியைச் சந்தித்து சிலையை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர் ஊர்மக்கள்.
சிவமயமாகக் காட்சியளிக்கும் அம்மன்
அன்னையும், சுவாமியும் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
அம்பாள் திருத்தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து வீரப்பல் புனைந்து கழுத்தில் தாலிப்பொட்டும் மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியாகவும் நான்கு திருக்கைகளும் அதில் வலப்புறக் கையில் உடுக்கையும் கீழ்க்கையில் திரிசூலமும் இடப்புற மேல்திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக்கொப்பரை தாங்கியும் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையிலும் காட்சியளிக்கிறாள்.

சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருக்கு இரண்டு திருக்கைகள் மட்டுமே உள்ளன. வலப்புறத் திருக்கரத்தில் செங்கோல் தாங்கியும் இடப்புறத் திருக்கரத்தில் திருநீற்றுக் கொப்பரையும் ஏந்தியும் இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் காட்சியளிக்கிறார்.
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் செவ்வாயும் இருந்தால் அதை ’பரிவர்த்தனை யோகம்’ என்று சொல்வார்கள்.
அதேபோல இங்கு சுவாமியின் சக்தியை அம்பாள் வாங்கியிருப்பதால்தான், அம்பாள் சிவமயமாகக் காட்சியளிக்கிறாள்.
சக்திமயமாகக் காட்சியளிக்கும் சுவாமி
அம்பாளின் சக்தியை சுவாமியும் வாங்கியிருக்கிறார். அதனால்தான் இங்கு சுவாமி சக்திமயமாகக் காட்சியளிக்கிறார். இதை ’பரிவர்த்தன யோகநிலை’ என்பார்கள். இதனால்தான் இங்கு அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது.
இதே போல அம்சத்தில் இருப்பதால்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், சங்கரன்கோயில் கோமதியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய தலங்களில் அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது.

காசியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர் – விசாலாட்சி ஆலயத்திற்குக் கீழ்ப்புறம் தென்வடலாக கங்கைநதி உள்ளது.
அதைப்போல இங்கும் இந்த ஆலயத்திற்குக் கீழ்ப்புறம் தென்வடலாக கங்கைக்கடல் என்னும் வங்கக்கடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி அன்னை முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கிறது.
தசரா திருவிழா, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும்.
10-வது நாள் நள்ளிரவு 12 மணியளவில் அம்பிகை முத்தாரம்மன், மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி கடற்கரையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கும். அம்மை இறங்குவதற்காக மட்டும் இந்த முத்தாரம்மன் அருள் புரியவில்லை.
சகல நோய்களையும் துன்பங்களையும் நீக்கி வரமருளுவதால்தான் இவளுக்காக விரதமிருந்து வேடமிட்டு தசரா திருவிழாவில் இவள் அருளைப் பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது” எனச் சொன்னபடியே சந்நிதி நோக்கி கும்பிட்டார்.

`ஆயுசு இருக்கிற வரைக்கும் மாலை'- நெகிழும் பக்தர்
46 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்து காளி வேடமிட்டு குலசைக்கு வந்து செல்லும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை சந்தித்துப் பேசினோம்,
”எனக்கு வயது 69 ஆகுது. 11 வயதாக இருக்கும் போது எங்க அம்மா எனக்கு ராஜா வேடம் போட்டு குலசைக்கு கூட்டிட்டு வந்தாங்க. 15 வயது வரைக்கும் ராஜா வேடம்தான் போட்டு கோயிலுக்கு வந்தேன். 13வது வயதில் எனக்கு அம்மை போட்டு அம்மையோடு அதிக காய்ச்சலும் வந்து உடல்நிலை மோசமாகி உயிர் போகிற நிலைமையில் இருந்தேன்.
‘’எம்புள்ளையைக் காப்பாற்றிக் கொடு தாயே..! என் மகன் ஆயுசு இருக்கிற வரைக்கும் தசராவுக்கு மாலை போட்டு காளி வேடம் கட்டி ஆடி வருவான்”னு சொல்லி அம்பாளை மனசில் நினைத்து எனக்கு விபூதி பூசி விட்டாங்க.
கொஞ்ச நாளிலேயே அம்மை முழுவதுமாக இறங்கி உடம்பு தேறிடுச்சு. அந்த வருஷத்திலிருந்து இப்போ வரைக்கும் காளி வேடம் போட்டுத்தான் கோவிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்துட்டு இருக்கேன்” என்றார்.
தண்டுபத்து பக்தரின் அனுபவம்
விரதமுறை குறித்துப் பேசிய தண்டுபத்து அருகிலுள்ள சிவலூரைச் சேர்ந்த பக்தர் மூர்த்தி,
“நான் 32 வருஷமா மாரியம்மன் வேஷம் போடுறேன். காளி வேஷம் போடுறவங்க 41 நாள் விரதம் இருப்பாங்க.
மற்ற வேஷம் போடுறவங்க தசரா திருவிழா கொடியேறிய நாளில் இருந்து 10 நாள் விரதம் கடைப்பிடித்து மாலை போட்டு அவரவர் நேர்த்திக்கடனாக நினைத்த வேஷத்தைப் போடுவார்கள்.
இந்த விரத நாட்களில் ஒரு நேரம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிட்டு வருவோம்.

தசரா பிறை
கொடியேறிய நாளில் மாலை போட்ட பிறகுதான் வேஷம் போடக்கூடிய பெட்டியை கீழே இறக்கி வேஷம் போடுவோம்.
அந்தந்த ஊர்க் கோயில்களிலோ அல்லது அந்தந்தத் தெருக்களில் ஓர் இடத்தில் ஓலைக் குடிசை அமைத்தோ அதில் முத்தாரம்மன் திருவுருவப்படம், திரிசூலம் வைத்தோ தசராவுக்கு மாலை போடும் பக்தர்கள் கூடி 10 நாட்களும் தினசரி பஜனையுடன் கூடிய பூஜைகளைச் செய்வார்கள்.
இந்த ஓலைக் குடிசையை ’தசரா பிறை’ எனச் சொல்வார்கள். பொதுவாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் குலசைக்கு மாலை போட்டு வேஷம் போட்டுவந்த பக்தர்களாகத்தான் இருப்பார்கள்” என்றார்.
நெல்லையைச் சேர்ந்த பக்தரின் அனுபவம்
நெல்லையைச் சேர்ந்த பக்தரான சிவசுப்பிரமணியன், ”உடல் நோய்கள், கடன் பிரச்னை, குடும்ப சண்டை சச்சரவு முதலான சகல பிரச்னைகளும் தீர மனமுருகி முத்தாரம்மனை வேண்டிக்கொண்டு தசரா திருவிழாவில் மாலை போட்டு விரதமிருந்து வேடமணிந்து முத்தாரம்மனைக் காண வந்தால் அடுத்த வருட தசராவுக்குள்ளேயே மாற்றம் தெரியும்.
முதலில் மாலை போடும் பக்தர்கள் அம்பாளிடம் வாக்கு கேட்டு அம்பாள் என்ன வேஷம் எனச் சொல்கிறாளோ அந்த வேஷத்தைப் புனைந்து தர்மம் எடுத்து கோயிலுக்கு வருகிறார்கள்.
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அம்பாள் சொன்ன வேஷம் போட்டு 7 வீடு, 11 வீடு, 21 வீடு, 51 வீடு என தங்கள் எண்ணப்படி அத்தனை வீடுகளில் தட்டு ஏந்தி தர்மம் எடுக்க வேண்டும் என்பது அம்பாளின் கட்டளை.

விநாயகர், முருகர், சிவன், பார்வதி, ராமர், லட்சுமணர், ஆண்டாள், லட்சுமி, நாராயணர், நரசிம்மர், அம்மன், காளி, கருங்காளி, மயானக்காளி, சுடலை, கருப்பசுவாமி, முனியசுவாமி, குறவன், குறத்தி, அனுமன், ராஜா, ராணி, போலீஸ், பிச்சைக்காரன், கிழவன், கிழவி, என பல வகை வேடங்களை பக்தர்கள் போட்டு முத்தாரம்மனை தரிசிக்க வருகிறார்கள்.’’ எனச் சொல்லி முடித்தார்.
தசரா கொடியேறிய நாள் முதல் குலசை கோயில் வளாகம் முதல் கடற்கரை வரை திரும்பும் திசையெங்கும் செவ்வாடை பக்தர்களும், பல்வேறு வேடமணிந்த பக்தர்களுமாக காட்சியளிக்கிறார்கள். காளி கோஷமும் ஓங்கி ஒலிக்கிறது. வாருங்கள் நாமும் தசரா நாயகி முத்தாரம்மனை தரிசிப்போம்!