திருச்சுழி: 1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்; புனரமைப்பு பணியின்போது தங்கத் தகடுகள் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் வேண்டிய வரம் நிறைவேறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றன. தற்போது இக்கோயிலில் உள்ள பழைய கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்து அடிப்படை வசதி குறைவாகக் காணப்பட்டது. இதற்காக தற்போது திருப்பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பணிக்காக சிலைகள் மற்றும் சிவலிங்கத்தினை நகர்த்தும் பணிகள் நடைபெற்றது. சிவன் சிலையை நகர்த்துவதற்காக சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் 4 மனித உருவம் பொறிக்கப்பட்ட தங்க தகடுகள், மற்றும் ஒரு ராஜா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத்தால் ஆன தகடுகள், மேலும் ஒரு சில தங்க தகடுகள் கிடைத்தது. இதையடுத்து தங்க பொருட்களை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் நகைகள் எடை போடப்பட்டு சரிபார்க்கப்பட்ட போது சுமார் 16.600 கிராம் எடை இருந்தது தெரிய வந்தது.
பின்னர் அதிகாரிகளால் இலாகா முத்திரை வைத்து சீல் வைக்கப்பட்ட நிலையில் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு சிலைகள் பிரதிஷ்டை செய்யும்போது மீண்டும் சிவலிங்கத்தின் அடியில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எஸ்.கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் திருநாகேஸ்வரி தாயார் கோயில் சிவலிங்கத்தின் அடியில் பழங்கால மனித உருவம் மற்றும் ராஜா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள், கண்டு எடுக்கப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த சுற்று வட்டார கிராம பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பழைமை வாய்ந்த சிவாலயத்தில் புனரமைப்பு பணிகளுக்காகப் பணிகள் நடைபெறும் நிலையில் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் அரிய பொருட்கள், ரகசியங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.