கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?
கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்தில் மற்றும் வரும் வழியில் பலியானவர்கள் அனைவரின் சடலங்களும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் சனிக்கிழமை நள்ளிரவு வைக்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவக் குழுக்களும் கரூருக்கு வரவழைக்கப்பட்டது.
தொடர்ந்து, அன்றிரவே அனைத்து சடலங்களையும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்து ஞாயிற்றுக்கிழமை காலையே உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்ததாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. இரவில் உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவு பகிரப்பட்டுள்ளது.
அதில், தெரிவிக்கபட்டிருப்பதாவது:
“சில மருத்துவ நிறுவனங்கள் இரவுநேர உடற்கூராய்வு செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றம், குறிப்பாக தேவையான விளக்குகள் மற்றும் உடற்கூராய்வு செய்வதற்கான உள்கட்டமைப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் இரவு நேர உடற்கூராய்வு செய்வது சாத்தியமாகும்.
எனவே, மாலை நேரத்துக்குப் பிறகு உடற்கூராய்வு வழக்கமாக நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சட்டம் - ஒழுங்கு நிலைமை இல்லாவிட்டால், கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகிக்கப்படும் குற்றங்கள் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகளை இரவு நேரத்தில் உடற்கூராய்வுக்கு உட்படுத்தக்கூடாது.
இரவுகளில் உடற்கூராய்வு செய்யப்படுவதை முழுமையாக விடியோவாக பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
