கரூர் பெருந்துயரம்: "யாரும் இதை விரும்ப மாட்டார்கள்; வதந்திகளை பரப்ப வேண்டாம்" -...
சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது
மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என்று கேட்டான். ஆனால் போதிய பணம் இல்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் சிறுவன் தொடர்ந்து சிக்கன் சமைக்கவேண்டும் என்று கேட்டு தன் தாயாரிடம் அடம்பிடித்திருக்கிறான். இதனால் பல்லவி கோபத்தில் வீட்டில் கிடந்த சப்பாத்தி உருட்ட பயன்படுத்தும் கட்டையை எடுத்து தன் மகனை சரமாரியாக அடித்து உதைத்தார்.

மகன் மட்டுமல்லாது 10 வயது மகளையும் கொடூரமாக அக்கட்டையால் தாக்கினார். இதில் 7 வயது கணேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறான்.
அவனை பல்லவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் இருந்தார். இதனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது பல்லவி தனது மகன் உடம்பு மீது ஒரு துணியைப் போட்டு மூடி வைத்திருந்தார். சிறுவன் எப்படி இறந்தான் என்று கேட்டதற்கு, தன் மகன் மஞ்சள் காமாலை காரணமாக இறந்துவிட்டான் என்று பல்லவி தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த உள்ளூர்காரர்கள், பையன் மீது போர்த்தப்பட்டு இருந்த பெட்ஷீட்டை எடுத்து பார்த்தபோது சிறுவனின் உடம்பு முழுக்க காயம் இருந்தது.
இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லவி அடித்ததில் அவரது 10 வயது மகளும் காயம் அடைந்திருந்தார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர். 10 வயது சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது முதலில் எதுவும் சொல்லவில்லை. அதன் பிறகு தனது தாயார் தன்னையும், தனது தம்பியையும் அடித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சொந்த மகனை அடித்துக்கொன்ற பல்லவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லவி தனது கணவனை பிரிந்து குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார்.