TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report
காணாமல்போன சபரிமலை கோயில் தங்க பீடங்கள்; உபயதாரர் உறவினர் வீட்டில் மீட்பு நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் 2019-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உபயமாக வழங்கிய இந்த கவசங்களை சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி தயாரித்து வழங்கியிருந்தது. இதற்கிடையே தங்க கவசங்களில் சில பராமரிப்பு பணிகள் இருப்பதாக இம்மாத தொடக்கத்தில் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அதேசமயம் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் மற்றும் ஐகோர்ட்டின் அனுமதி இல்லாமல் தங்க கவசங்கள் பராமரிப்பு பணிக்காக சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக சரியான நடவடிக்கை இல்லை எனவும், அவற்றை திரும்ப கொண்டுவரவேண்டும் என சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி மற்றும் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோருக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 2019-ம் ஆண்டு தங்க கவசங்கள் பொருத்தப்பட்ட சமயத்தில் 40 ஆண்டுகள்வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்த நிலையில், 6 ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்று பராமரிக்கவேண்டிய அவசியம் என்ன? எனவும் ஐகோர்ட் கேள்வி எழுபியிருந்தது. இதையடுத்து தங்க கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. விரைவில் அவை பழையபடி பொருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சுமார் 40 கிலோ எடை கொண்ட தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. துவார பாலகர்களின் பீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசம் காணாமல் போனதாகவும் தெரியவந்தது. அவை தேவசம் போர்டின் லாக்கர் அறையில் உள்ளதாக உண்ணிகிருஷ்ணன் போற்றி கூறியிருந்தார்.

துவார பாலகர்களின் பீடத்தில் இருந்த தங்க கவசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேவசம் விஜிலென்ஸ் லாக்கர் அறைகளில் சோதனை நடத்தியது. மேலும், அவற்றை உபயமாக வழங்கிய உண்ணிகிருஷ்ணன் போற்றியின் பெங்களூரில் உள்ள வீட்டிலும், திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி மினி அந்தர்ஜனம் என்பவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

அந்த பீடங்கள் 2021-ம் ஆண்டு முதல் உண்ணிகிருஷ்ணன் போற்றியின் உதவியாளரான வாசுதேவனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தனதுவீட்டில் அவற்றை பாதுகாக்க முடியாது என வாசுதேவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவற்றை உண்ணிகிருஷ்ணன் தனது சகோதரி வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 7-ம் தேதி துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில், துவார பாலகர்களுக்கு தான் செய்துகொடுத்த 2 பீடங்கள் லாக்கரில் உள்ளதாகவும். அவற்றை வழங்கினால் சரிசெய்து தரலாம் எனவும் உண்ணிகிருஷ்ணன் போற்றி கூறியிருந்தார். தேவசம்போர்டு லாக்கரில் பீடங்கள் இருப்பது எப்படி தெரியும் என கோர்ட் கேள்வி எழுப்பியபோது டைப்பிங் சமயத்தில் ஏற்பட்ட பிழை என கூறியுள்ளார் உண்ணிகிருஷ்ணன் போற்றி. இதை அடுத்தே அவர்மீது சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.