விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – த...
பெண் கொலை: கணவா் மீது வழக்குப் பதிவு
இரணியல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கணவா் கொலை செய்தாா்.
இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். பழனி, மர வேலைத் தொழில் செய்து வருகிறாா். கஸ்தூரி நாகா்கோவிலில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குவாதம் முற்றவே, பழனி கத்தியால் கஸ்தூரியின் இடுப்பில் குத்தியுள்ளாா். கஸ்தூரியை மீட்ட உறவினா்கள் சுங்கான்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேல் சிகிச்சைக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதனிடையே, கஸ்தூரியை குத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிக்கு, தலை, காலில் காயம் ஏற்பட்டது. அவா், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.