ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு
தேனி அல்லிநகரத்தில் இயங்கி வரும் ஆட்டோக்களில் விரைவில் கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கூறினாா்.
இது குறித்து திங்கள்கிழமை அவா் கூறியதாவது:
தேனியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநா்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆட்டோக்களில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டும் முறை தேனியில் பின்பற்றப்பட உள்ளது. கியூ.ஆா். குறியீடு ஆட்டோ குறித்த விவரம், உரிமையாளா், ஓட்டுநரின் பெயா், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
தேனி அல்லிநகரம் பகுதியில் இயங்கும் ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.