வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி
வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர்;-
”கரூரில் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் விலை மதிக்க முடியாத 41 உயிர்களை இழந்து உள்ளோம்.
மனித உயிர்கள் என்பதால் முதலமைச்சர் நேரில் சென்று உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்து நிவாரணம் அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெடிய வரலாற்றில் ஒரு தலைவர் இப்படித்தான் இயங்குவார் என்பதற்கு முதலமைச்சர் ஒரு சான்று.
2001 ஆம் ஆண்டு கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதை கண்டித்து மிகப்பெரிய பேரணியை திமுகவினர் நடத்தியபோது, அரசாங்கம் ஆதரவோடு வன்முறையை தூண்டி விட்டார்கள். அன்றைக்கு பல பேர் காயம் அடைந்தார்கள், உயிரிழப்பு நடந்தது. கருணாநிதி அன்றைய நேரம் அதே இடத்துக்கு சென்று தொண்டர்களுடன் நின்றார்.
கரோனா காலத்தில் அப்போதைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் தயங்கிய போது எதிர்க்கட்சி தலைவராக பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கியவர் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களுக்கு தேவை வரும்போது எங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் நிற்பவர்கள்தான் திமுக தலைவர்கள், தொண்டர்கள்.
இப்போது கரூர் சம்பவத்தில் எனக்கு தனிப்பட்ட சந்தேகம் உள்ளது. களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள், கரூரில் ஏன் களத்தில் நிற்கவில்லை. செய்தியாளர்களைச் சந்திக்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வரக் காரணம் என்ன ?
விஜய் பிரபலமான நடிகர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். விஜய் திருச்சியில் தங்கி பணிகளைப் பார்க்காதது ஏன்? நம்மால் தான் இது நடந்தது என்ற ஒரு ஒப்புதல் மனசாட்சியில் இருப்பதால்தான் விஜய் சென்னைக்கு ஓடி வந்தார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு பணம் கொடுக்கிற ஆதவ் அர்ஜுனா, நேபாளத்தில் நடப்பது போல ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்கிறார். அகில இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் என்றால், தமிழக பொருளாதார வளர்ச்சி 12 சதவிகிதம். தமிழகம் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது புரட்சி, வன்முறை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜூனா தனது பதிவை நீக்க வைக்கும் அளவுக்கு தமிழக மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு என் நன்றி.
ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டுகிறார். ஆதவ்வை கட்சியின் தலைவர் விஜய் கண்டித்துள்ளாரா? கட்சியிலிருந்து நீக்குவாரா?
முதலமைச்சர் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரூர் சம்பவத்தை அணுகியுள்ளார்.
திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் இன்னமும் கரூர் களத்தில் இருக்கிறார்கள். ஆனால் விஜய் சென்னை வந்து ஒலிந்துக்கொள்ள காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.