Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி
கரூர் நெரிசல்: `விஜய்யின் தாமதம்; பிடிவாதமாக முன்னேறிச் சென்றனர்’ - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் இன்று (15.10.2025), கரூர் துயர சம்பவம் குறித்து எதிர்க்கட்சியில் பேசுவதற்கு முன்பு, அரசு எடுத்த நடவடிக்கைகளையும் எடுக்க உள்ள வழிமுறைகளையும் பற்றி பேசுவதாக முதலமைச்சர் பேசத் தொடங்கினார். (எதிர்க்கட்சியினர் பேசிய பிறகுதான் முதல்வர் பேச வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.)
முதலமைச்சர் பேசியதாவது, "இதற்குப் பிறகு எதிர்க்கட்சியினர் பேச உள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு கூட்டு முயற்சிக்கு வலு சேர்க்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என அரசு சார்பில் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 27.09.2025 அன்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் இதற்கான அனுமதியை கேட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொது மக்களுக்குத் தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை. இறுதியாக 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
`அதிபடியான பாதுகாப்பு ஏற்பாடுகள்’
காவல்துறையைப் பொருத்தவரை வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை விட அதிகமாக கூட்டம் வரும் என்று கணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூட்டம் நடத்த அனுமதி கேட்ட கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வர தொடங்கி விட்டனர். 27 - 9 - 2025 அன்று அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு 9:25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார்.

குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவில்லை
அதன்பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்து 7 மணி நேரம் கழித்துதான் வந்தார். இந்த கால தாமதம் மக்கள் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இங்கே அனைத்து கட்சி சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை, உணவு வழங்க எந்த விதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
அதே வேலுசாமிபுரத்தில் இரு தினங்களுக்கு முன்பாக, அதாவது 25.09.2025 அன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்ட பரப்பரை நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். 12,000 முதல் 15,000 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த பரப்புரை கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் 137 காவலர்களும் 30 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த கட்சியினுடைய நிகழ்ச்சி நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லை தவிட்டுபாளையம் சோதனை சாவடி நிகழ்ச்சிக்கு பின் கேரவன் வாகனத்தை பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களுடன் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு பிரச்சார வாகனம் வரும்போது அதிகப்படியான கூட்டம் இருந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்சியினுடைய இணைச் செயலாளரையும் பலமுறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறையின் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் மீறி வாகனம் அக்ஷயா மருத்துவமனையில் இருந்து 30-35 மீட்டருக்குச் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினர் தடுமாறியுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்த பெண்கள் குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சு திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கின்றனர்.
(முழு உரை சில நிமிடங்களில் அப்டேட் செய்யப்படும்)